வேட்பாளர்கள் தொடர்பாக வெளியான கருத்துக் கணிப்புகள் பொய்

Report Print Steephen Steephen in அரசியல்

அஞ்சல் வாக்குகளில் தமது வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக சில அரசியல்வாதிகள் மற்றும் நபர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார்.

அஞ்சல் வாக்குகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பிறகே எண்ணப்படும். இப்படியான நிலையில் சிலர் தமது வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக கூறுவது ஏனைய வாக்காளர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

அத்துடன் அரச புலனாய்வு சேவை நடத்திய கருத்து கணிப்பிற்கு அமைய தமது வேட்பாளர் வெற்றி பெறுவார் என சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வரும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை என தெரியவருகிறது.

அரச புலனாய்வு சேவை ஜனாதிபதிக்கு மட்டுமே கட்டுப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்களின் போது அரச புலனாய்வு சேவை உட்பட புலனாய்வு பிரிவுகள் கருத்து கணிப்புகளை நடத்தி அரச தலைவருக்கு அறிக்கை வழங்குவது சம்பிரதாயமானது. எனினும் இம்முறை அப்படியான கருத்து கணிப்புகளை நடத்த ஜனாதிபதி தேசிய புலனாய்வு சேவைக்கு அனுமதி வழங்கவில்லை என தெரியவருகிறது.

இந்த பின்னணியிலேயே புலனாய்வுப் பிரிவின் கருத்து கணிப்பு அறிக்கை எனக் கூறி சமூக வலைத்தளங்களில் போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முழு தேர்தல் முடிவுகளை உள்ளடக்கியதாக அந்த அறிக்கைகள் காணப்படுவது அவை போலியானவை என்பதை காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

எது எப்படி இருந்த போதிலும் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு இடையில் கடந்த வாரம் கடுமையான போட்டி நிலவியது. எனினும் தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே அஞ்சல் வாக்களிப்பில் தமது வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கூற நேர்ந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு சஜித் பிரேமதாசவுக்கு இருப்பதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ எனது கணிப்பு சரியானதா தவறானதா என்று எனக்கு தெரியாது. இதற்கு முன்னரும் ஜனாதிபதித் தேர்தல்களில் எனது கருத்தை தெரிவித்துள்ளேன். அதிகமான வாய்ப்பு சஜித்திற்கு இருக்கின்றது. அதுதான் நான் காணும் உண்மை. அது தவறவும் கூடும்.

சாதாரணமாக தேர்தல்களில் வெற்றி தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கும் வாக்குகள் மற்றும் சுதந்திரக் கட்சிக்கு இருக்கும் வாக்குகள் மற்றும் ஜே.வி.பிக்கு இருக்கும் வாக்குகள் பற்றியே பார்ப்போம்.

சஜித் பிரேமதாசவின் நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் அவரது தந்தை இந்த நாட்டு மக்களுக்கு வீடுகளை கொடுத்தார். வறிய மக்களுக்கு வீடுகளை கொடுத்தார் என்பது சஜித் பிரேமதாசவுக்கு சாதகமாக இருக்கும்.

வறிய மக்கள் அதனை மறக்க மாட்டார்கள். அதேபோல் தற்போது சமுர்த்தி என்ற பெயரில் வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை சஜித் பிரேமதாசவின் தந்தையே ஜனசவிய என்ற பெயரில் ஆரம்பித்தார். ஆடை தொழிற்சாலைகள் அவரது தந்தையின் வேலைத்திட்டம். மக்களின் மனதில் அவை இருக்கின்றன.

அத்துடன் இலங்கையில் இன, மத மற்றும் சாதி ரீதியான கீழ் நிலையில் உள்ளவர்கள் பெருமளவில் இருக்கின்றனர். இயற்கையாகவே அவர்களை சஜித் கவர்ந்துள்ளார். இதனை தான் நான் காண்கின்றேன். இவரது தந்தை எமக்கு உதவியதால், நாமும் அவரது மகனுக்கு உதவ வேண்டும் என மக்கள் நினைக்கக் கூடும்.

இதனால், நாடு செல்வ செழிப்பாகும் என நான் கூற மாட்டேன். மற்றவர்களுக்கு தமது கட்சியின் வாக்கு வங்கிகள் மட்டுமே உள்ளன. மற்றவர்களுக்கு இல்லாத சாதகமான நிலைமை சஜித்திற்கு உள்ளது. அவர் வறியவர்களை கவர்ந்துள்ளார். அந்த சாதகமான நிலைமை அவருக்கு கிடைக்கும் ”என விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.