நாட்டை பிரிக்க உதவுவோருக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கியுள்ளது - கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிரிக்க உதவுவோருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாகவும், கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெளிவாகி இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் சவாலை ஏற்று சவாலை வெற்றி கொண்ட அணி. வேலை செய்யக் கூடிய அணியினர் எங்களுடன் உள்ளனர். நான் எனக்கு வழங்கிய அனைத்து வேலைகளையும் செய்து முடித்துள்ளேன்.

பாதுகாப்பு செயலாளராகவும் நகர அபிவிருத்தி செயலாளராகவும் எனக்கு வழங்கிய பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளேன். நான் அமைச்சராக பதவி வகிக்கவில்லை என்றாலும் எனக்கு வழங்கிய பொறுப்புகளை நிறைவேற்றினேன்.

அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சராக இருந்து கூறுவதை செய்யாமல், ஜனாதிபதி பதவி கிடைத்ததும் அதனை செய்ய போவதாக கூறுவது நம்ப முடியாத நகைச்சுவை.

அமைச்சரவையின் உறுப்பினராக இருந்து, கூட்டு பொறுப்பை வகிக்கும் போது பொலிஸ் பிரதான சட்டத்தை வளைக்க தயாரான போதும், சட்ட திணைக்களத்தின் உயர் அதிகாரி சட்டத்தை மீற முயற்சித்த போதும், எதனையும் செய்ய அரசாங்கத்தின் பலமிக்க அமைச்சர், ஜனாதிபதியாக பதவிக்கு வந்து சட்டத்தின் ஆளுமையை உறுதிப்படுத்த போவதாக கூறுவது கேலிக்குரியது.

சமூக ஊடகங்களில் பொய்களை ஜோடித்து, மக்களை ஏமாற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சித்தாலும் புத்திசாலியான மக்கள் ஏமாறமாட்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிரிப்போருக்கு ஆதரவு வழங்குகிறது என்பது அவர்களின் அறிக்கையில் தெளிவாகியுள்ளது. அந்த அறிக்கையின் வார்த்தைகளில் எந்த அர்த்தமும் கிடையாது.

ஜனநாயகம் பற்றி அவர்கள் பேசினாலும் நாமே 30 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினோம்.

ஆயுதம் தாங்கிய அணிகளிலும் இருந்து ஆயுதங்களை திரும்ப பெற்று அபிவிருத்தி செய்தோம். இவற்றை பற்றி பேசுவதில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அமைதியாக இருக்கவும் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்லவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தோம்.

தனியார் துறையுடன் இணைந்து தொழிற்சாலைகளை உருவாக்கினோம். இவர்களுக்கு அவற்றை பேசும் தேவையில்லை” எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.