சஜித் பிரேமதாசவின் மாற்று வியூகம்! எதிர்வரும் 16ஆம் திகதி என்ன நடக்கும்?

Report Print Sujitha Sri in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான போட்டியாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ மிகவும் தாமதமாகவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என கட்டுரையாளர் சத்ரியன் தெரிவித்துள்ளார்.

தனது கட்டுரையில் அவர் மேலும்,

கோத்தபாய ராஜபக்சவும், அநுரகுமார திசாநாயக்கவும் தமது தேர்தல் அறிக்கைகளை முன்கூட்டியே வெளியிட்டு விட்ட போதும், சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை தபால் மூல வாக்களிப்பு ஆரம்பித்த நாளன்று தான் வெளியிடப்பட்டது.

கோத்தபாய ராஜபக்ச, அநுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் தான் கடைசியாக சஜித் பிரேமதாச வேட்பளராக அறிவிக்கப்பட்டார்.

அதுபோலத் தான் அவரது தேர்தல் அறிக்கையும் மிகத் தாமதமாக வெளியாகியிருக்கிறது.

கிட்டத்தட்ட 65 இலட்சம் தபால் வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முப்படையினரும், பொலிஸாருமே ஆவர்.

இவர்கள் வாக்களிப்பதற்கான கால அவகாசம் இன்னமும் இருந்தாலும் ஏனைய அரச ஊழியர்கள் கடந்த 31ஆம் திகதி வாக்களிக்க ஆரம்பித்த பின்னரே, சஜித் பிரேமதாசவின் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனால் சஜித் பிரேமதாச தனது தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளாமலேயே அரச ஊழியர்களில் கணிசமானோர் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாக்களிக்கின்ற அளவுக்கு இலங்கையின் வாக்காளர்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்து விட்டனர் என்று கூற முடியாவிட்டாலும், தேர்தல் ஒன்றில் வேட்பாளரின் வாக்குறுதிகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை மிக முக்கியமானது.

அதேவேளை, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர், கோத்தபாய ராஜபக்ச தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முறைக்கும், சஜித் பிரேமதாச அதனை வெளியிட்ட முறைக்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீன நிறுவனத்துக்கு கோத்தபாய ராஜபக்சவினால் விற்கப்பட்ட காணியில் இன்று வானளாவ எழுந்து நிற்கும் ஷங்ரிலா விடுதியில் தான் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்களுடன் சீனத் தூதுவர் செங் ஷியுவான் உள்ளிட்ட இராஜதந்திரிகளும் கூட கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் சஜித் பிரேமதாச தனது தேர்தல் அறிக்கையை கொழும்பிலோ அல்லது பிரம்மாண்டமான ஓர் இடத்திலோ வெளியிடவில்லை.

கண்டியில் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடமே முதலில் அதனை கையளித்தார். அதற்கு பின்னர் கண்டியில் ஒரு விடுதியில் நடந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு கூட பிரம்மாண்டமான ஒன்றாக இருக்கவில்லை.

சஜித் பிரேமதாச தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு கண்டியைத் தெரிவு செய்ததும், குறிப்பாக மகாநாயக்கர்களிடம் அதனைக் கையளித்ததும் முக்கியமான விடயம்.

சஜித் பிரேமதாசவின் தந்தையான ரணசிங்க பிரேமதாச, 1988ஆம் அண்டு டிசம்பர் 19ஆம் திகதி நடந்த இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கொழும்பில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை.

கண்டி தலதா மாளிகையின் மாடத்தில் தான், அவர் பதவியேற்றுக் கொண்டார். அது அவருக்கு வாக்களிக்காவர்களையும் கூட அவரைத் திரும்பி பார்க்க வைத்தது.

வித்தியாசமான ஒரு அணுகுமுறையாக அவரை ஆதரிக்க தயங்கிய கண்டிய மேல்தட்டு சமூகத்தைக் கவருகின்ற ஒரு உத்தியாக பௌத்தத்தின் பாதுகாவலன் என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் கையாண்ட உத்தி என்ற கருத்துக்கள் அப்போது நிலவின.

தந்தையின் வழியிலேயே ஆட்சி செய்வேன் என்றும், அவரைப் போலவே நாட்டுக்காக உயிரைக் கொடுக்கடவும் தயாராக இருக்கிறேன் என்றும் தேர்தல் பிரச்சாரங்களில் கூறிவரும் சஜித் பிரேமதாசவும் கூட அதே கண்டியில் இருந்தே தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்துக்குப் பிள்ளையார் சுழியைப் போட முனைந்திருக்கிறார்.

அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் தான் சிங்கள பௌத்த வாக்குகளின் மையம். சிங்கள பௌத்தர்களிடம் செல்வாக்குப் பெற்ற இந்த இரண்டு பீடங்களினதும் ஆதரவுக்காகவே நாட்டின் பிரதான அரசியல் தலைவர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

சஜித் பிரேமதாசவுக்கு பிரதான பௌத்த பீடங்களின் ஆதரவு இல்லை. சிங்கள பௌத்தர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று பொதுஜன பெரமுன தரப்பினால் வதந்திகள் பரப்பப்பட்டு வந்திருக்கின்றன.

சிறுபான்மையின மக்களின் வாக்குகளை நம்பியே போட்டியில் இறங்கியிருப்பவர் என்றும் அவருக்கு சிங்கள மக்களின் ஆதரவு இல்லை என்றும் தொடர்ச்சியாக கூறப்பட்டு வரும் கருத்துக்களை உடைக்க அவர் கடினமாக முயற்சிக்கிறார்.

காலிமுகத்திடலில், மூன்று இலட்சம் வரையான மக்களை ஒன்றுதிரட்டியது அதற்கான முதலாவது முயற்சியாக குறிப்பிடலாம்.

அடுத்து அவர் தன்னை ஒரு தூய்மையான சிங்கள பௌத்தர் என்று அடையாளப்படுத்தி வருகிறார். பௌத்த மதத்தின் முன்னுரிமையை பாதுகாப்பேன் என்ற வாக்குறுதியைக் கொடுக்கிறார்.

சிங்கள பௌத்தர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களைக் கவரக்கூடிய வகையில் பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறார்.

சர்வதேச சக்திகளிடம் படையினரை காட்டிக் கொடுக்கமாட்டேன், வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்க மாட்டேன், இராணுவ தளபதியை பாதுகாப்பேன் என்பன போன்ற வாக்குறுதிகளின் ஊடக அவர் சிங்கள பௌத்த வாக்குகளை தன் பக்கத்துக்கு ஈர்க்க முயற்சிக்கிறார்.

தனியே பிரச்சாரக் கூட்டங்களினால் மாத்திரம் அதனைச் செய்ய முடியாது. அதற்கு மாற்று வியூகமாகவே மகா நாயக்கர்களிடம் தேர்தல் அறிக்கையை முதலில் கையளித்து அவர்களை தன் பக்கம் ஈர்க்க முனைந்திருக்கிறார்.

மகாநாயக்கர்களையும், கண்டியையும் வசப்படுத்துவது சஜித் பிரேமதாசவைப் பொறுத்தவரையில் முக்கியமானது. அந்த சவாலை அவர் தேர்தல் அறிக்கையின் மூலம் எதிர்கொள்ள முனைந்திருக்கிறார்.

அவரது இந்த அணுகுமுறை கண்டிய சமூகத்தையும், பிரதான பௌத்த பீடங்களையும் எந்தளவுக்கு கவரும் என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

ஆனாலும் சஜித் பிரேமதாசவின் இந்த உத்தி கோத்தபாய ராஜபக்சவின் உத்திக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

சஜித் பிரேமதாச கண்டியை தனது தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்காக தெரிவு செய்துள்ளதன் மூலம் அவர் வெற்றி பெற்றால் கண்டியில் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இது ரணசிங்க பிரேமதாசவின் வழியிலான ஆட்சிமுறையே நடக்கப் போகிறது என்பதற்கான ஒரு அடையாளமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ரணசிங்க பிரேமதாசவின் பலம் அவரது எளிமை தான். சாதாரண மக்களும் அவரை சந்திக்க முடிந்ததும் அவரை அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்ததும், அவருக்கான அடையாளங்களாக இருந்தன.

ரணசிங்க பிரேமதாசவிடம் இருந்த முக்கியமான ஒரு குணவியல்பு, அவர் எந்த இடத்தில் பலவீனமாக இருக்கிறாரோ அந்த இடத்தை குறிவைத்து செயற்படுவார்.

யாரிடத்தில் அவரது செல்வாக்கு குறைவாக இருந்ததோ அவர்களை நோக்கி தனது அரசியல் காய்களை நகர்த்தினார். அந்த காய்நகர்த்தல் அவருக்கு சாதகமான பெறுபேறுகளை தர தவறவில்லை.

இவ்வாறான ஒரு விம்பத்தை உருவாக்குவதில் சஜித் பிரேமதாசவும் அக்கறை கொண்டிருக்கிறார். தன்னை சிறுபான்மையின மக்களும் நம்புகின்ற ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதை விட அவர், பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக இருக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருக்கிறது.

ஏனென்றால் சிறுபான்மையின மக்களின் ஆதரவினால் மாத்திரம் அவரால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைப் பெற்றவிட முடியாது.

அவருக்கு பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் ஆதரவு இருந்தால் தான் அதனைச் சாதிக்க முடியும் . கோத்தபாய ராஜபக்ச நம்பவது போல சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற முடியும் என்று நம்புகின்ற நிலையில் சஜித் பிரேமதாச இல்லை என்பதே உண்மை.

இவ்வாறான நிலைமையை உடைப்பது தான் அவரது இலக்காக இருக்கிறது. அதற்காக அவர் சிங்கள பௌத்த மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கு கடுமையாக முயற்சிக்கிறார்.

அதற்காக அவர் கண்டியையும், பிரதான பௌத்த பீடங்களையும் தெரிவு செய்திருக்கிறார். இது மாத்திரம் அவர் சிங்கள பௌத்த மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்கு போதுமானதா என்பதை எதிர்வரும் 16ஆம் திகதி தான் விடையளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.