கோத்தபாயவை கூட்டமைப்பு அடியோடு நிராகரித்தமையை வரவேற்கின்றோம்! ரணில்

Report Print Rakesh in அரசியல்

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் அரங்கேறிய படுகொலைகளை நினைவில் வைத்து ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளமையை நாம் மனதார வரவேற்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் கோத்தபாய ராஜபக்சவை அடியோடு நிராகரித்து சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் முன்னைய செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டும், அவர்களது தேர்தல் அறிக்கைகளைப் பரிசீலித்தும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளனர்.

இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலைமைகளைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளார்கள்.

இந்தத் தீர்மானம் ராஜபக்சக்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கும் தெற்கு மற்றும் மலையக மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக இன, மத, பேதம் கடந்து நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.