பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் இரட்டை சகோதரர்கள்: மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்துள்ளதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றியை பெறுவார் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலருடன் அண்மையில் கேகாலையில் நடந்த சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு கேகாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இங்கு கருத்து வெளியிட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தற்போது மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கட்சியின் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி ஏற்படுத்திய இந்த கூட்டணி தொடர்பில் அவருக்கு நன்றியை கூறுகின்றேன்.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வேன். இதனடிப்படையில் கேகாலை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50,000 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெறசெய்வோம் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இங்கு கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், எனது கட்சியும் ஒரு கூட்டணிக்கு வந்துள்ளன. நாங்கள் இரட்டை சகோதரர்கள். கடந்த தேர்தலில் அமைந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி எனக்கு எதிர்க்கட்சியின் பலத்தை வழங்கினார்.

எதிர்க்கட்சியில் இருந்து நாங்கள் கட்சி ஒன்றை ஆரம்பித்தோம். பிரதேச சபைத் தேர்தலில் 71 வீத ஆசனங்களை கைப்பற்றினோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மொட்டுக் கட்சியும் எல்பிட்டிய தேர்தலில் தனித்து போட்டியிட்டன.

இரண்டு கட்சிகள் பெற்ற வாக்குகளை இணைத்தால், 70 சத வீதத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இம்முறை தேர்தலில் அமோக வெற்றியை பெறுவோம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.