சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதியை உருவாக்க முடியாது என்பதை உணர்த்துவோம்: றிஷாட்

Report Print Ashik in அரசியல்

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மன்னாரில் இன்று இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் எதிர்கால தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் இந்த தேர்தலில் நீங்கள் அமைதியாகவோ, அலட்சியமாகவோ இருந்துவிடக் கூடாது.

கடந்த காலங்களில் எமது மதஸ்தலங்களை நொருக்கியவர்கள், உரிமைகளை பறித்தெடுத்தவர்கள், வியாபார ஸ்தாபனங்களை நாசப்படுத்தியவர்கள், நிம்மதியை தொலைத்தவர்கள் அனைவரும் கோத்தபாயவுக்கு பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

இவர்களின் கனவுகளை சிதைப்பதற்காகவே சிறுபான்மை தலைவர்களான நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். எனவே இனவாதிகளின் சதிகளை முறியடிப்பதற்கும் தடுப்பதற்கும் நீங்கள் எம்முடன் கைகோர்த்து சஜித்தை வெல்லவையுங்கள்.

சிறுபான்மை மக்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோமேயானால் சஜித் பிரேமதாச பாரிய வெற்றியை பெறுவார்.

நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான இந்த தேர்தலில் நியாயம் வெல்ல வேண்டும், நீதி வாழ வேண்டும். இனவாதிகள் தமது அணிதான் வெற்றிபெறுமென்று தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

நமது சமூகத்தை அளிப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் செய்துவிட்டு இப்போது வாக்குகேட்டு வருகின்றார்கள். போதாக்குறைக்கு அவர்களது முகவர்களை வடக்கு,கிழக்குக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

பெருவாரியான பணத்துடன் வந்துள்ள இந்த கோடரிக்காம்புகள் வடக்கு,கிழக்கு பிரதேசத்தில் முகாமிட்டு வாக்கு கேட்கிறார்கள், கற்றை கற்றையாக காசை அள்ளி விசுறுகிறார்கள் போதாக்குறைக்கு இங்குள்ள சில பணக்காரர்களும் இந்த சதிக்கு துணைபோவதாக அறிகிறோம். பணத்தை காட்டி வாக்குகளை கொள்ளையடிக்கும் இந்த கூட்டத்திடம் ஏமாந்துவிடாதீர்கள்.

சஜித் பிரேமதாசாவை வெல்லவைப்பதன் மூலம் நமது எதிர்காலம் நமது மண்ணின் எதிர்காலம் சிறக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ஹக்கீம், மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers