வடக்கு, கிழக்கு தமிழர்களிடம் கெஞ்சி கூத்தாடிய நாமல்! அம்பலப்படுத்தும் அமைச்சர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் 17ஆம் திகதி சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பது உறுதி என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு கோரி கிளிநொச்சியில் இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இப்பொழுது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பார்த்து மகிந்த ராஜபக்சவின் பட்டாளம், கோத்தபாய ராஜபக்சவின் பட்டாளம், பசில் ராஜபக்சவின் பட்டாளம், நாமல் ராஜபக்சவின் பட்டாளம் ஆகியன நரித்தனமாக செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.

முதலாவதாக நாமல் ராஜபக்ச அவர்கள் இங்கு வந்து கெஞ்சி கூத்தாடி, நடந்தவைகள் எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என தெரிவித்து வாக்குக் கேட்கின்றார்.

அவ்வாறு எங்களுக்கு வாக்களிக்க முடியாது போனால் ஒரு தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என கோருகின்றனர். தமிழ் வேட்பாளராக எமது நண்பர் சிவாஜிலிங்கம் போட்டியிடுகின்றார். அவர் மீது எனக்கு கோபம் வராது. ஏனென்றால் நான் கோபப்படக்கூடிய நபர் அவரல்ல.

ஆனால், எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை, சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் என நாமல் ராஜபக்ச ஏன் கோரிக்கை விடுக்கின்றார் என்பதை சிந்தித்து பாருங்கள். அதில்தான் அவர்களின் தந்திரம், சூட்சுமம் தங்கியிருக்கின்றது.

இது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, ஜனாதிபதி தேர்தல். நாம் தற்போது கால் இறுதி, அரை இறுதி ஆகியவற்றைத் தாண்டி இறுதிச் சுற்றில் நின்று கொண்டிருக்கின்றோம்.

அதில் இருப்பவர்கள், எங்களது ஜனாதிபதி சஜித் மற்றும் தோற்றுப்போகும் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர்.

கோத்தாவுக்கு நீங்கள் வாக்குகளைப் போட்டால் வந்து உங்களைப் போடுவார்கள் அதை மறந்துவிடாதீர்கள்.

கடத்தப்பட வேண்டும் என்றால், காணாமல் போக வேண்டும் என்றால், அடி உதை வாங்க வேண்டும் என்றால், கைதாக வேண்டும் என்றால், கெடுபிடி வேண்டும் என்றால், இனவாதம் வேண்டும் என்றால், மத வாதம் வேண்டும் என்றால், நாட்டை விட்டுத் துரத்தப்பட வேண்டும் என்றால் கோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்.

இல்லை, இந்த நாட்டில் கிறிஸ்தவராக, தமிழராக, பௌத்தராக, இஸ்லாமியர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால், ஒரு நாட்டிற்குள் ஒரே தேசம் என வாழ வேண்டும் என்றால் எங்களது வேட்பாளர் சஜித்துக்கு வாக்களியுங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளே கடும் பாடுபட்டு, ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நிறுத்தியுள்ளோம். அதில் பெரும் பங்கு மனோ கணேசனுக்கு இருக்கின்றது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

இது பகல் நேரம். பகல் நேரத்தில் கண்ணைத் திறந்து கொண்டே நாங்கள் சென்று குழியில் விழ முடியாது. கண் திறந்து பார்க்கின்றோம்.

சஜித், ஏழை மக்களின் கண்ணீரை, துன்பத்தை, கஷ்டங்களை அறிந்த எனது நண்பர். எனது நண்பர் நாளை ஜனாதிபதியாக போகின்றார். அதை மறந்து விடக்கூடாது.

இலங்கை வரலாற்றில் எட்டாவது ஜனாதிபதியாக வரப்போகின்ற சஜித், இதற்கு முன்னர் இருந்த 7 ஜனாதிபதிகளையும் விட சிறந்த நல்லாட்சியை வழங்கி தமிழ் மக்களின் காயங்களை ஆற்றுவார். தமிழ் மக்களின் மனங்களை வெல்லுவார்.

சஜித்தை ஒரு கைக்குழந்தை என நினைத்தார்கள், அவர் ஒரு சின்னப் பெடியன் என நினைத்தார்கள். ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கினால் அவர் மூழ்கி காணாமல் போய்விடுவார் என கூறினார்கள்.

ஆனால், அவர் காணாமல் போகின்றவர் அல்ல, அவர் மூழ்கி முத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தான் ஒரு தலைவன் என நீரூபித்திருக்கின்றார்.

இங்கிருக்கக் கூடிய வயதான தாய்மார்களுக்கெல்லாம் சஜித் அவர்களின் மகன், புதல்வன். இளைஞர்களுக்கெல்லாம் சஜித் ஒரு சகோதரன். நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சஜித் அவர்களின் நாளைய ஜனாதிபதி.

எனவே நாளை உருவாக போவது சஜித்தின் ஆட்சியல்ல, ரணிலின் ஆட்சியல்ல, மனோ கணேசனின் ஆட்சியல்ல. அவரது ஆட்சி சட்டத்தின் ஆட்சி. நீதியின் ஆட்சி. எனவே மறந்து விடாதீர்கள் எங்களது சின்னம் அன்னம்... அன்னமே எங்கள் எண்ணம் என குறிப்பிட்டுள்ளார்.