சர்வதேசமயப்படுத்தப்படும் திருகோணமலை விளையாட்டரங்கு

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

முழு நாட்டுக்கும் ஜனசவிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திருகோணமலை உவர்மலை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

அவர் அக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

என்னுடைய அரசாங்கத்தில் இரண்டு சீருடை துணிகளை 44இலட்ச மாணவர்களுக்கு வழங்கவும், உரமானியத்தை இலவசமாக வழங்குவதோடு,டிஜிட்டல் துறை செயற்பாடுகளை உருவாக்கி ,அனைத்து பிரதேச செயலகங்களிலும் நவீன வசதிகளையம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

எமது புதிய அரசில் புதிய சட்ட ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமித்து துஷ்பிரயோகம்,திருட்டு மற்றும் குற்றங்கள் இல்லாத துறைகளை ஏற்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்துவோம்.

திருகோணமலை மாவட்டத்தில் புதிய வீட்டுத் திட்டங்களை உருவாக்குவதுடன், காணி உறுதிப் பத்திரங்கள், மீன்பிடி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதோடு, திருகோணமலை மக்கேஷர் விளையாட்டரங்கினை சர்வதேச விளையாட்டரங்காக தரமுயர்த்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன். அத்தோடு பதினொரு பிரதேசசெயலகங்களும் அனைத்து வசதிகளுடனும் புதிய செயற்றிட்டங்களுடனும் இயங்ககுவதற்குரிய செயற்றிட்டமும் முன்னெடுக்கப்படும்.

அதேபோன்று முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பிணையில்லாத மூன்று இலட்சம் ரூபாய் கடன் திட்டம், பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு சம்பள அதிகரிப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு படைக்கு விசேட வசதிகள் மற்றும் முப்படைக்கு வசதிகள் மற்றும் யானை பிரச்சினைக்கு தீர்வு போன்றன என்னுடைய அரசில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலதிக செய்திகள் - முபாரக்