மஹிந்தவின் பரிந்துரைகளும் கவனத்திற் கொள்ளப்படும்: ரணில்

Report Print Kamel Kamel in அரசியல்

அதிகார பகிர்வின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பரிந்துரைகளையும் கவனத்திற் கொண்டே தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டை பாதுகாத்துக் கொண்டு ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்தல் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரபூர்வ கொள்கையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது குறித்து தேவையற்ற வகையில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் முன்மொழியப்பட்ட யோசனைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் யோசனைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அச்சம் கொண்டால் அவரினால் முன்மொழியப்பட்ட யோசனைத் திட்டம் பாதகமானது என்றே அர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட சுதந்திரமான சமூகத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டில் சர்வாதிகார ஆட்சி உருவாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.