அதிகார பரவல் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சஜித்!

Report Print Murali Murali in அரசியல்

ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பரவலை வழங்குவதில் எந்தவொரு குற்றமும் தான் காண்பதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதனை இதனைப் பொருத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நாட்டைப் பிரிக்கப்போவதாக கூச்சலிட்டுத் திரிவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“கடந்த காலத்தில் இராணுவச் சமூகம் அதிகாரம் படைத்தவர்களுக்காக சேவை செய்தார்கள். போர் வெற்றியின் பின்னர் ஒரு குடும்ப நலனுக்காக பணிபுரிந்ததை பார்த்தோம்.

இராணுவத்தினரை மணல் மூடைகளை சுமக்கவைத்து கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு முன்பாக மோட்டார் பந்தயப் போட்டிக்காக ஒழுங்கமைப்பு செய்யும் பணிகளில் ஈடுபடுத்திய யுகம் உங்களுக்குத் தெரியும்.

படையினரை வீதி சுத்திகரிப்பு, சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தி படையினரின் அபிமானங்களை கேவலப்படுத்தும் யுகமும் இருந்தது. அப்படியொரு யுகத்திற்கு இனி அனுமதி வழங்கக்கூடாது. நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த ஜனாதிபதியின் மகன் நான்.

தீவிரவாத தாக்குதல், கொடூரத்துவம் என்பதை அறிவேன். ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பை பங்கப்படுத்த மாட்டேன். எமக்கு எதிரான அணியினர் பொய்யான பிரசாரங்களை செய்கின்றனர்.

நாட்டை பிரிக்கவும், சமஸ்டி ஆட்சியை நிறுவவுள்ளதாகவும் போலிகளை கூறி நாடுமுழுவதிலும் கூறித்திரிகின்றனர். எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஒற்றையாட்சியை மாற்றியமைக்க மாட்டேன்.

இதுபோன்று யாருடனும் பேச்சு நடத்தவும் இல்லை, அப்படியொரு எண்ணமும் என்னிடமில்லை. வெளிநாடு சென்று 13க்கும் அப்பால் சென்று தீர்வு வழங்கவோ பொய்யான வாக்குறுதியும் நான் அளிக்கவில்லை.

ஒருகாலத்தில் வெளிநாடு சென்றால் 13 பிளஸ் என்றும், நாட்டிற்குள் 13 என்றும் கூறினார்கள். வெளிநாடு சென்று ஒரு நாக்குடனும், நாடு திரும்பியதும் வித்தியாசமாகவும் கூறினார்கள். ஆனால் எனக்கு இருக்கிறது ஒரு நாக்கு.

அதனூடாக ஒற்றையாட்சி, இறையான்மை மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மை, அரசியல் சுதந்திரம் பாதுகாப்பு என்பதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். பேச்சுவார்த்தைக்கும் உள்ளாக்க மாட்டேன்.

எங்களுக்கு பலர் ஆதரவை அறிவித்திருப்பது எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டே ஆகும். எந்த சந்தர்ப்பத்திலும் சமஸ்டி குறித்து பேசியதில்லை. நான் படையினரின் அர்ப்பணிப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டதில்லை.

வெளிநாட்டு அமைப்புக்கள் எமது நாடு மீது விரல் நீட்டும்போது எதிர்கட்சியாக இருந்த காலத்திலும்கூட அதற்கெதிராக குரல்கொடுத்தவன்.

இப்போது கவலைக்குரிய விடயம்தான், தேர்தல் காலத்தில் அப்போதிருந்த ஆட்சியாளர்கள், சஜித் பிரேமதாஸ சமஸ்டி குறித்து பேசுவதாக கூறிவருகின்றனர்.

நான் சமஸ்டி குறித்து பேசவில்லை. மஹிந்த ராஜபக்சதான் சமஸ்டி குறித்து பேசியவர். அவர்தான் அதன் ஆசிரியர். வெளிநாடு சென்றபோது அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் 13 பிளஸ் எனக் கூறியவர்.

நான் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாதவன் நான். நிபந்தனைகளுக்கும் அடிபணியாதவன். நான் பொதுமக்களுக்கு முன்பாக மாத்திரமே தலைகுணிபவன், முழங்காலிடுபவன்.

ஒற்றையாட்சி என்ற பதத்துடன் எம்முடன் பலர் இணைகின்ற போது பொறாமை கொண்டவர்களும், மந்திரம்போல 13 பிளஸ் என்று உலகம் முழுவதிலும் பரைசாற்றிய மஹிந்த ராஜபக்ச இப்போது பலவற்றையும் கூறிவருகின்றார்.

இந்த நாட்டில் வட-கிழக்கை இணைத்து புறம்பான நாடு என்று கூறியவர்தான் வரதராஜப்பெருமாள். அவர் இன்று யாருடன் இணைந்துள்ளார்? எதிரணியுடன் இருக்கிறார். அவர் இப்போது நல்லவர்.

அவ்வாறு சுதந்திர நாடு என அறிவிப்பை மேற்கொண்டவருடன் எதிரணியினர் ஒப்பந்தம் செய்துகொள்கின்றனர். அந்த இடத்தில்தான் தேசத்துரோகம், இனத்தை காட்டிக்கொடுப்பது என்கிறது அடங்குகின்றது.

ஆகவே நான் வெளிநாடு சென்றாலும் இங்கிருந்தாலும் 13 பிளஸ் அல்லது 13 குறைப்பு எனக் கூறப்போவதில்லை. ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பரவல் என்பதில் எந்த குற்றமும் இல்லை.

இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஐக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஸ்ரீலங்கா என்ற உணர்வு ஏற்படும் வகையில் நாட்டிகுள் அதிகாரப் பரவலை செய்ய முடியும்.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவல் என்று கூறி பலரும் எம்முடன் இணைந்தவுடன் சிலர் பொறாமை எரிச்சலில் கூச்சலிடுகின்றனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.