பிரித்தானிய தமிழர் பேரவையினரின் மேல்முறையீட்டுக்கான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Report Print Dias Dias in அரசியல்

பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் ரோகினி சிவகுருநாதன் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையினர் மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் ரோகினி சிவகுருநாதன் பிரித்தானிய தமிழர் பேரவையில் (BTF) இருந்து நீக்கியமை தொடர்பாக அவர் தொடுத்த வழக்கின் தீர்ப்பு 2018 ஆம் டிசம்பர் 21ஆம் திகதி வழங்கப்பட்டது.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட உறுப்பினர் நீக்கம் தவறு எனவும், மீண்டும் அவரை உறுப்பினராக இணைக்க வேண்டும் என்றும், எழுபதினாயிரம் பவுண்சுகள் ரோகினி சிவகுருநாதனுக்கு வழங்க வேண்டும் எனவும் பிரித்தானிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மீதான மேன்முறையிட்டுக்கு 21/02/2019 வரை காலவரையறை அளிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த வழக்கினை நடத்தியதால் அவர்களுக்கு மிக பெரும் பொருளாதார சிக்கலுக்குள் உள்ளாகியிருப்பதாகவும், மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் இன்னும் பெரும் பொருட்ச்செலவை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நாங்கள் மேன்முறையீடு செய்வதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆனால் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பிரித்தானிய உயர்மன்றத்தில் மேல்முறையீட்டுக்கான அனுமதி கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்கள். பிரித்தானிய தமிழர் பேரவை. இந்த மனு மீதான விவாதம் நேற்று 07/11/2019 உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களான ரவிக்குமார் இந்து குமரேந்திரன், குமரேந்திரன், செந்தில்குமார், வசீகரன் ஆகியோர் இந்த வழக்கின் விவாதத்தின் போது சமூகமளித்திருந்தனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக வாதாடிய Lamp Chambers சட்டத்தரணி Dr.Joanna Kerr குறித்த காலவரையறைக்குள் மேன்முறையீடு செய்ய முடியாமைக்கான காரணங்களை எடுத்துக் கூறினார்.

தமிழ் மக்கள் சார்பாக ஐநா கூட்டத்தொடரில் பிரித்தானிய தமிழர் பேரவை பங்கேற்பதாலும், அதற்கான தயார்படுத்தல்கள் இருந்தமையாலும் தமக்கு போதிய நேரம் இருக்கவில்லை எனவும், தமது பொதுக்குழுவினை கூட்டி தீர்மானம் எடுப்பதற்கு கொடுக்கப்பட்ட காலவரையறை போதுமானதாக இருக்கவில்லை எனவும் பல்வேறுபட்ட காரணங்களை முன்வைத்தார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட உறுப்பினருக்கு 70000 பவுண்சுகளை வழங்க தமக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை எனவும், ஆனால் அவருக்கு மீண்டும் உறுப்பினர் அந்தஸ்து வழங்க முடியாது என்பதாலுமே மேன்முறையீட்டுக்கு அனுமதி கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக வாதிட்டப்பட்டதாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பிந்தர் சைனி பிரித்தானிய தமிழர் பேரவையின் மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் ஏற்கனவே இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்த பட வேண்டும் என்ற கோரிக்கையை ரோஷினி சிவகுருநாதன் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு தொடர்பான முழு விபரங்களும் எழுத்து மூலமான தீர்ப்பு வெளிவந்த பின்னர் கிடைக்கப்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.