2009 யுத்த வெற்றியின் பின்னர் எல்லாமே தலைகீழாக நடந்தன! சரத் பொன்சேகா

Report Print Murali Murali in அரசியல்

யுத்தவெற்றி என்ற பெருமை தலைக்கேறியதால் ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கௌரவப்படுத்த தவறியதாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஒரு படையணியில் நிரந்தரமாக பணிபுரியாமல், நாட்டை விட்டுச் சென்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச எவ்வாறு ஸ்ரீலங்காவின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.

2009ம் ஆண்டு போர்வெற்றியின் பின்னர் பலவற்றை எதிர்பார்த்த போதிலும் அனைத்துமே தலைகீழோக நடந்தன. போர்வெற்றியின் பின் இராணுவத் தளபதியை சிறைதள்ளவும், ஜெனரல் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பவும் நடவடிக்கை எடுத்தார்கள்.

அப்போதைய ஆட்சியாளர்கள் இராணுவத்தினரை இவ்வண்ணமாகவே கவனித்தார்கள். அதற்கு பிரதான காரணம் என்பதாக, போர்வெற்றியை பங்கிட்டுக்கொள்ள இருந்த பேராசையாகும்.

உலகக் கிரிக்கெட் கிண்ணத்தை 1996ம் ஆண்டில் வென்றுகொண்டபோது அதற்கு தற்போதைய அமைச்சரான அர்ஜூன ரணதுங்க சொந்தம் கொண்டாடவில்லை.

சிறந்த வைத்தியர் சிறப்பாக சத்திரசிகிச்சையை செய்தால் அதற்கு சுகாதார அமைச்சர் உரிமை கொண்டாடமுடியாது. ஆகவே இந்த செயற்பாட்டினால் எனக்கு அதிருப்தி ஏற்பட்டது.

ஆனால் தற்போது இராணுவத்தைப் பலப்படுத்தும் தேவை சஜித் பிரேமதாஸவுக்கு உள்ளது. போர் வெற்றிக்கு உரிமைகொண்டாடியவர்கள் இராணுவத்தை பலப்படுத்தல், நவீனமயப்படுத்தல், புதிய தொழில்நுட்பங்களை சேர்த்தல் போன்ற விருத்தியானவற்றை செய்யவில்லை.

இப்போது இராணுவத்திற்கு தாமே தலைமை தாங்கியது என்றும், போரை வெற்றிகொண்டது தனது வழிநடத்தலின் ஊடாகவே என்றும் லெப்டினன் ஒருவர் கூறுகின்றார். அப்படியென்றால் இந்த நாட்டில் எத்தனையோ லெப்டினன் இருக்கிறார்கள்.

நாங்கள் இராணுவத்தினரை பழிவாங்கல் செய்யவில்லை. போர்க் காலத்தில் படையிலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த 2000 சிப்பாய்களை நான் இராணுவ நீதிமன்றத்தில் முன்நிறுத்த வெலிக்கடை சிறையில் அடைத்தேன்.

இராணுவத்தை விட்டுச்சென்றவர்கள் இராணுவத்தின் பலம், நலன் குறித்து பேச அருகதையில்லை.

ரக்னா லங்கா நிறுவனத்தை படையினரின் நலனுக்காக அமைத்திருந்தாலும் ஓய்வுபெற்ற அதிகாரி விண்ணப்பம் செய்தால் தொகுதி அரசியல்வாதியிடம் கடிதம் கோரினார் கோத்தபாய. இதுதான் அவரது செயற்பாடு” எனகூறியுள்ளார்.