நாடெங்கிலும் தென்படும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கான சகுணங்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

இது ஒரு அபூர்வமான மேடை, இந்த அபூர்வம் நிகழ்வதற்கு காரணம் சஜித் பிரேமதாச என்ற வெற்றி வேட்பாளர் என்றால் அது மிகையாகாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு கோரி இன்றையதினம் கல்குடா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மிகவும் பல பிரயத்தனங்களைச் செய்து இன்று நாங்கள் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வந்திருக்கின்றோம்.

இதே போன்றதான ஒரு நிலமைதான் அன்று 1988ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவின் தந்தையாரான ரணசிங்க பிரேமதாசவிற்கும் இருந்தது. அன்று ரணசிங்க பிரேமதாசவிற்கு தட்டில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சி பதவியைத் தாரை வார்த்துக் கொடுக்கவில்லை.

பல போராட்டங்களுக்குப் பின்னரே ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியானார். அந்த சமயத்தில் நாடெங்கிலும் யுத்தம் தலைவிரித்தாடியது. வடக்கில் புலிகளுடைய கொடிய யுத்தம், தெற்கில் ஜேவிபியினரின் யுத்தம் என நாடெங்கும் வன்முறையே நிலவியது.

இதற்கிடையில் வெற்றிவாய்ப்பே இல்லை, 11 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் கீழ் பலதரப்பட்ட விடயங்களில் மக்கள் வெறுப்படைந்திருந்த நிலையிலேயே வேட்பாளராக நியமிக்கப்பட்ட ரணசிங்க பிரேமதாசவை இறுதி நேரத்திலே ஆதரிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ், எங்களுடைய தலைவர் அஸ்ரப் எடுத்த முடிவு இந்த நாட்டின் தலைவிதியை மாற்றியமைத்திருந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை.

பிரேமதாசவின் வெற்றிக் குறித்து யாரும் கனவு கூட காணமுடியாத அந்த சூழலில் மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

இந்த நிலையில் தற்போது சஜித் பிரேமதாச களமிறங்கியுள்ளபோது பல்வேறு இனவாத விமர்சனங்களை எதிர்தரப்பு முன்வைத்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பதற்கு இழுத்தடிப்புச் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. அவர்களும் தற்போது முடிவெடுத்தாகிவிட்டது.

தற்போது, அமைச்சர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெறுவதற்கான சகுணங்கள் நாடெங்கிலும் தென்பட்டுள்ள நிலையில், எதிரணியினர் ஆட்டம் கண்டுவிட்டனர். அவர்கள் தற்போது நம்பியிருப்பதெல்லாம் சில தனியார் ஊடகங்களின் ஊதிப்பெருக்கும் பிரச்சாரத்தினை.

இந்த தனியார் ஊடகம், அரச ஊடகம் போன்றவற்றின் பிரச்சாரங்களை நம்பிக்கொண்டிருக்காமல் தற்போது ஒரு யுக மாற்றம் மிகவும் அமைதியாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

சஜித் பிரேமதாச பஞ்சணையில் இருந்து இலகுவாக அரசியலுக்குள் வரவில்லை. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த தனது தந்தை புலிகளினால் கொலையுண்ட பிற்பாடு தனது தந்தையின் சொந்த தொகுதியான கொழும்பு மத்தியைக் கூட ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவிற்கு வழங்கவில்லை.

அவரைக் கொண்டுபோய் ராஜபக்சவினரின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் கொண்டு சென்று தள்ளினார்கள். இப்போது இருக்கும் ராஜபுத்திரர்கள் போல சஜித் அல்ல, கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய மக்களின் துன்பங்களோடு ஒன்றித்து அரசியல் செய்ய தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டவர் சஜித் என குறிப்பிட்டுள்ளார்.