தமிழ் மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? சிவசக்தி ஆனந்தன் கேள்வி

Report Print Theesan in அரசியல்

கோரிக்கைகளை முன்வைத்த தமிழ்க் கட்சிகளை சம்பிரதாயத்திற்கு கூட அழைத்துப் பேசாத உங்களுக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டுமென அரச தரப்பு மற்றும் எதிர்க்கட்சியை பார்த்து சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்தும் வாக்களிப்பு முறையான நோட்டவை இலங்கையிலும் அறிமுகப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், சுயாதீன அமைப்புகள் இணைந்து 5 கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட 13 அம்சக் கோரிக்கையானது கடந்த 70 வருட காலம் தீர்க்கப்படாதிருக்கும் முக்கியமான அம்சங்களே அவை.

அவற்றில் அரசியல் தீர்வு தவிர்த்து ஏனையவை யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகளாகவே உள்ளன. அதாவது, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்குதல், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியன காணப்படுகின்றன. இவை தனி நாட்டுக்கான கோரிக்கைகளல்ல.

தமிழ் மக்களின் மீதான இனப் படுகொலை காரணமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வகையிலேயே 13 அம்சக் கோரிக்கைகளை வேட்பாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கையெடுத்தோம். ஆனால், பொதுஜன பெரமுன வேட்பாளர் வெளிப்படையாக நாங்கள் அவர்களைச் சந்திக்கத் தயாரில்லையெனக் கூறிவிட்டார்.

அதேபோன்று சஜித் பிரேமதாசவும் ஒரு படி மேலே சென்று எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப் போவதில்லை. அவர்களைச் சந்திக்கவும் தயாரில்லையெனவும் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் நீங்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்த்துக்கொண்டு எமது கோரிக்கைகளை நிராகரித்துக்கொண்டு சம்பிரதாயப்படியாவது சந்திக்கத் தயாரில்லாத நேரத்தில், தமிழ் மக்கள் உங்களுக்கு எந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டுமென்பது தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்விகளாக இருக்கின்றன என அவர் கூறியுள்ளார்.