கோத்தபாயவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை

Report Print Steephen Steephen in அரசியல்

அனைத்து வறிய குடும்பங்களுக்கு போஷாக்கு பொதி மற்றும் அரச வேலை வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வாக்குறுதி அளித்துள்ளார்.

பொலன்நறுவையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

சம்பிரதாய அரசியலுக்கு பதிலாக புதிய வேலைத்திட்டம், புதிய கொள்கையுடன் நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல தயாராக இருப்பதாக கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்கு பிரவேசித்த போது கூறியிருந்தார். இதற்கு தன்னிடம் திட்டங்கள் இருப்பதாகவும் வாக்குறுதி அரசியலுக்கு பதிலாக செயற்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அவர் தொடர்ந்தும் கூறி வந்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய கோத்தபாய தனது கொள்ளை அறிக்கையை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, கொள்கை அறிக்கையில் இல்லாத வாக்குறுதிகளை வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து வறிய குடும்பங்களிலும் இருக்கும் இளம் உறுப்பினருக்கு அரச வேலை வழங்குவதாக அவர் வழங்கியுள்ள இந்த வாக்குறுதி இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்த கோத்தபாய ராஜபக்ச, கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரச வேலை வாய்ப்புகளை வழங்கிய விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தான் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகிக்கும் போது தனது அமைச்சுக்கு 800 பட்டதாரிகளை நியமிக்க அரசாங்கம் தயாரானதாகவும் தான் அதனை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அரச வேலை வாய்ப்பு தொடர்பாக இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்னர் கோத்தபாய கொண்டிருந்த நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டுள்ளது தெளிவாகியுள்ளது.

இலங்கை அரச சேவையானது தற்போது நாடு தாங்க முடியாத சுமையில் இருந்து வருகிறது. அரச துறையில் அதிகளவில் அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் இருக்கின்றனர். ஆனால், செயற்திறனும் பலாபலன்களும் குறைவாக இருந்து வருகின்றது.

இப்படியான அரச சேவையில் மேலும் லட்ச கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவது நாட்டின் பொருளாதாரத்தை நஷ்டமடைய செய்யும் முயற்சியாகும். கோத்தபாய ராஜபக்ச இதனை அறியாமல் இல்லை. எனினும் அவர் இருக்கும் சிரமமான நிலைமையில் இப்படியான வாக்குறுதியை வழங்க நேரிட்டுள்ளது.

அவரது யோசனையான நிவாரண பொதி தொடர்பான அறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது. காணப்படும் நிலைமைக்கு அமைய அடுத்த வாரத்திற்குள் கோத்தபாய ராஜபக்ச, நத்தார் தாத்தாவாக மாறுவார் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.