சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம்! ஓட்டமாவடியில் சஜித் வழங்கியுள்ள வாக்குறுதி

Report Print Navoj in அரசியல்

இந்த நாட்டில் இருந்து போதைப்பொருள், கொள்ளை, கொலைகாரர்களை, சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாதொழிப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இனவாதம், மதவாதம் என்பவற்றை எனது தலைமையின் கீழ் இல்லாது ஒழிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இன்று புதிய ஜனநாயக முன்னணியின் கல்குடாத் தொகுதிக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

உங்கள் பொன்னான வாக்குகளால் நான் ஜனாதியாக வந்ததும் வாழைச்சேனையில் இருக்கின்ற மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதனை முழுமையாக குளிரூட்டப்பட்டு வழங்குவேன்.

கல்குடாத் தொகுதியிலுள்ள சிறிய வைத்தியசாலைகள், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் விரிவாக நடைமுறைப்படுத்தி செய்வதற்கு எனது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்பேன்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையினை தரமுயர்த்துவேன். அதேபோன்று இளைஞர், யுவதிகள் விளையாடும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தினை சர்வதேச மைதானமாக தரமுயர்த்தி தருவேன்.

வாழைச்சேனை கடதாசி ஆலையை புனரமைத்து தருவதாக பலர் கூறியுள்ளனர். அதனை கேட்டு நீங்கள் வெறுத்துப் போய் உள்ளீர்கள்.

நான் செய்ய முடியாதவற்றை கூற மாட்டான். நான் சொல்வதை செய்பவன். உங்கள் வாக்குகளால் நான் ஜனாதிபதியாக நிச்சயமாக வருவேன் என்பதை கூறிக் கொள்கின்றேன்.

வாழைச்சேனை கடதாசி ஆலையை மூன்று மாத்திற்குள் அபிவிருத்தி செய்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவேன் என்பதை கூறிக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.