சஜித்திடம் அடிப்படைவாதிகள் இல்லை: அஜித் பீ பெரேரா

Report Print Steephen Steephen in அரசியல்

இன பேதமின்றி மக்களுக்கு சேவை செய்யும் உண்மையான மக்கள் தலைவர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மாத்திரமே என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் இலாபம் பெறும் நோக்கில், சஜித் பிரேமதாச அடிப்படைவாதிகள் எவரையும் தனது தேர்தலில் இணைத்து கொள்ளவில்லை. சஜித் பிரேமதாசவுக்கு தனது தேர்தல் நடவடிக்கைகளில் பெரிய சவால்களை எதிர்நோக்க நேரிட்டது.

இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், புதிய பிரதமர், புதிய அமைச்சரவையுடன் புதிய ஆட்சியை ஏற்படுத்துவேன் என சஜித் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அவருக்கு அந்த ஆத்ம பலம் கிடைத்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்திற்கு தற்காலிக வெற்றிகள் கிடைக்கும்.

நாட்டுக்கு தேவையான ஜனநாயக, சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவருக்கும் தலைமை வழங்கும் தலைவராக சஜித் பிரேமதாச வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றார்.

கொள்கைகளை பாருங்கள், அவற்றை அமுல்படுத்தக் கூடிய தலைவர் யார் என்று பார்த்து அவருக்கு வாக்களியுங்கள் என அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,

அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானகரமானவை. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலிலேயே நாட்டின் எதிர்காலம், எதிர்கால சந்ததி உட்பட அனைவரது எதிர்காலமும் தங்கியுள்ளது.

நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம், நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாத்து தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தி முன்நோக்கி செல்லக் கூடிய தலைமை எமக்கு கிடைத்துள்ளது. இவற்றை பாதுகாத்து முன்நோக்கி செல்ல அனைவரும் முன்வர வேண்டும் என மக்களுக்கு கூறுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.