ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை விடும் தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

எம்.சீ.சீ. உடன்படிக்கை சம்பந்தமான அமைச்சரவை பத்திரத்தை இரத்துச் செய்வது தொடர்பாக கோத்தபாய ராஜபக்ச மட்டுமல்லாது சஜித் பிரேமதாசவும் தெளிவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எம்.சீ.சீ உடன்படிக்கை சம்பந்தமாக கொண்டுள்ள நிலைப்பாட்டை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த உடன்படிக்கை நாட்டின் இறையாண்மைக்கு பெரிய அழுத்தங்களை ஏற்படுத்தும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் சரத்து முற்றாக இல்லாமல் போகும். உயிரை தியாகம் செய்தேனும் இந்த உடன்படிக்கை வருவதை தடுத்து நிறுத்த வேண்டியது எமது கடமை.

கோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச உட்பட அனைவரும் இந்த உடன்படிக்கை தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இரத்துச் செய்ய இணங்க வேண்டும். குறிப்பாக இது சம்பந்தமான சஜித் பிரேமதாச இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

இதனால், தான் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த அமைச்சரவை பத்திரத்தை இரத்துச் செய்வேன் என அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அவர் ஆட்சிக்கு வந்ததும் இந்த உடன்படிக்கை அமுல்படுத்துவார் என்ற சந்தேகம் உள்ளது.

இதனால், என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு மக்களுக்கு இருக்கின்றது எனவும் ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நட்ட நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரதன தேரர், நான் அமைதியாக இருந்து விட மாட்டேன். யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த வழக்கை நிறுத்த முடியாது.

அவர் அரசாங்கத்தில் இணைவாரா இல்லையா என்பது தெரியாது. அடுத்த அரசாங்கத்தில் அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காது என்பது மட்டும் உறுதி எனவும் கூறியுள்ளார்.