மட்டக்களப்பில் சஜித்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு

Report Print Malar in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், எழுத்து மூலமாக கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை கடிதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  • தேசிய பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வு.
  • கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை முழுமையாக்குதல்.
  • தொழிற்சாலை அமைத்தல்.
  • பாலங்களை அமைத்தல்.
  • வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவாகத் தொழில்வாய்ப்புகளை வழங்குதல். இதன்போது உள்வாரிப் பட்டதாரி, வெளிவாரிப் பட்டதாரி, வெளிநாட்டுப் பட்டதாரி, எச்.என்.டி.எ பட்டதாரி என்ற பேதங்கள் பார்க்காமல் தொழில் வழங்குதல்.
  • கிரான்புல் அணைக்கட்டினை நிர்மாணித்தல்.
  • அரச ஊடகத்துறையில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் பதவியுயர்வுகளின் போது பாரபட்சம் காட்டாமையை உறுதிப்படுத்தல்.
  • வீதிகளை புனரமைத்தல்.
  • விவசாயத்துறை, நீர்ப்பாசனத்துறை என்பவற்றை மேம்படுத்தல்.
  • மேய்ச்சல் தரைகளைப் பிரகடனப்படுத்தல் போன்ற கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இதற்கு சஜித், குறித்த விடயங்களைச் சாதகமாக கையாளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், தனது வெற்றியின் பின்னர் ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாரபட்சம் பக்கச்சார்பு இல்லாமல் சகல மக்களுக்கும் சம வாய்ப்புக்கள், சமத்துவங்களை வழங்க வேண்டும் என்பதை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மாநகர முதல்வர் தி.சரவணபவன், ரெலோ அமைப்பின் பிரதித் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணித் தலைவர் லோ.தீபாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers