விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்? அமைச்சர் ராஜிதவின் தகவல்

Report Print Sujitha Sri in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன சில மிக முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கூறுகையில்,

தேர்தலுக்காக ராஜபக்சர்கள் பாரிய செலவை செய்கின்றனர். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எவ்வாறு அப்படி செலவழிக்க முடியும்?

புலிகளிடமிருந்த பெருந்தொகை தங்கத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கி வைத்துள்ளனர்.

இலங்கையில் அவை வைக்கப்பட்டுள்ள சில இடங்கள் குறித்தும் எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மனித படுகொலைகள், ஊழல் - மோசடிகள் குறித்து பேசியிருந்தோம். விசேடமாக நான் இந்த விடயங்களை வெளிப்படுத்தியிருந்தேன்.

எமது அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கின்ற போதும் இவை தொடர்பில் தொடர்ந்து பேசிவந்ததுடன், நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்தினேன்.

ஆனால், விசாரணைகள் முழுமையாக நடைபெறவில்லை. ஊடகங்களைப் பயன்படுத்தியும் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வழங்கியும் அவர்களது வழக்குகளை பதுக்கியதுடன் தாமதத்தையும் ஏற்படுத்தினர்.

நானும், அமைச்சர் சம்பிக்கவும் இணைந்து அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து விசாரணைகளை விரைவாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தினோம்.

லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட உட்பட பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதும் போத்தல ஜயந்த உட்பட பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையும் அனைவருக்கும் தெரியும்.

அவர்கள் காலத்தில் வெள்ளை வேன்களை செலுத்திய மற்றும் கடத்தப்பட்ட பலர் எம்முடன் தொடர்புகொண்டு நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளியிட வேண்டுமென கூறினர். பலர் அச்சம் காரணமாக மறைந்து வாழ்கின்றனர்.

எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் கட்டாயம் அனைத்து விசாரணைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers