ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவரின் மாமனார் வீட்டில் கோத்தபாயவுக்கு விருந்து

Report Print Steephen Steephen in அரசியல்

ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதலில் கொழும்பு ஷெங்கீரீலா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் என்பவரின் மாமனாரான அலாவுதீன் ஜூவலர்ஸ் உரிமையாளர் கோடிஸ்வர வர்த்தகர் அலாவுதீனே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக மன்னாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான முழுமையான அனுசரணையை வழங்கியதாக தெரியவருகிறது.

பிரசாரக் கூட்டத்தின் பின்னர் அலாவுதீன் மன்னார் இல்லத்திற்கு கோத்தபாய ராஜபக்சவை அழைத்து விருந்துபசாரம் நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி யேசுநாதர் மரணத்தில் இருந்து உயிர்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது நாட்டில் ஆறு இடங்களில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தன. அலாவுதீனின் மருமகனான மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் தனது செம்பு தொழிற்சாலையில் இருந்தே தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை தயாரிக்க செம்பு உலோகத்தை வழங்கியதாக தெரியவந்தது.

அலாதீனின் ஒரே மகளான பாத்திமா, மொஹமட் இப்ராஹிம் இல்ஹாமையே திருமணம் செய்திருந்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது அலாவுதீனின் மகளது இரகசிய வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்கொலை தாக்குதல் தொடர்பாக அமைச்சர் றிசார்ட் பதியூதீன் மீது குற்றம் சுமத்தி கடந்த மே மாதம் 9 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த எஸ்.பி. திஸாநாயக்க, ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அலாவுதீன் என்ற வர்த்தகர், அமைச்சர் றிசார்ட் பதியூதீன் கட்சியின் பொருளாளராக பதவி வகித்ததாகவும் வர்த்தகரின் மகள் மற்றும் இரண்டு மகன்மார் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.