வாக்குரிமையுள்ள சகல தமிழ் மக்களும் தவறாமல் வாக்களித்தே ஆக வேண்டும்! இந்து குருமார் அமைப்பு கோரிக்கை

Report Print Rakesh in அரசியல்

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்குரிமையுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமென்று இந்து குருமார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வரக் குருக்கள் இது குறித்து இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அன்பார்ந்த தமிழ் மக்களே எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணி செயற்பட வேண்டும்.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாகப் பயன்படுத்த வேண்டும்.

எமது சமுதாயத்தினது உரிமை கருதி செல்லுப்படியாகக்கூடிய வண்ணம் எமது வாழ்வுரிமையைத் தவறாது கண்டிப்பாகப் பயன்படுத்தி பயன் பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.