நாட்டின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்ய நாடு முழுவதும் தயார் நிலையில்!

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று முதல் தேர்தல் முடியும் வரை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்கு பொலிஸாரின் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலா இரண்டு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக ரோந்து பணிகள் மற்றும் சோதனை சாவடிகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையினரும், சிவில் பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 12 ஆயிரத்து 856 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில், ஒரு கோடியே 59 இலட்சத்து, 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களில் 6 இலட்சத்து 9 ஆயிரத்து 317 பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அஞ்சல் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 31ஆம் திகதி, இந்த மாதம் 1,4,5ஆம் திகதிகளில் நடைபெற்றன.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் 26 அங்குலம் நீளமாக வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 43 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு அருகில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் கோரிக்கை விடுத்தால், இராணுவத்தையும் கடமையில் ஈடுபடுத்த தயாராக இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேர்தல் முடிவுகளை நாளைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வழங்க முடியும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.