அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த சஜித்! சூடுபிடிக்கும் அரசியல் களம்

Report Print Vethu Vethu in அரசியல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீங்கவில்லை என்றால், புதிய கூட்டணியுடன் பொதுத் தேர்தலில் களமிறங்க சஜித் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாகவே சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமான அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணியை விடவும் அதிக ஆசனங்களை வென்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சஜித்திற்கு பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தை பெறுவதே அந்த குழுவின் நோக்கம் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை வாழ்த்திய சஜித் பிரேமதாஸ, தான் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், மீண்டும் மக்கள் சேவைக்கு வருவதாகவும் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.