என்மீது நம்பிக்கை வைத்து அன்னத்துக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி! வேலுகுமார்

Report Print Malar in அரசியல்

இத்தேர்தலில் நாம் ஆதரித்த அணி, பின்னடைவை சந்தித்திருந்தாலும் எமக்கான மக்கள் பலத்தில் மற்றும் ஆதரவில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் எடுத்த முடிவு சரியானது என்பதையே தமிழ் மக்கள் வழங்கியுள்ள பேராதரவு உறுதிப்படுத்துகின்றது.

ஜனாதிபதி தேர்தல் என்ற முதல் சுற்றில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தல் என்ற 2ஆம் சுற்றில் மீண்டெழுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

அந்த வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்வது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் பங்காளிகளும் சிந்திக்க சிறப்பான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் பேசும் மக்கள் பேராதரவை வழங்கியிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் சஜித்தே வெற்றிபெற்றிருந்தார். நுவரெலியா மாவட்டத்திலும் முன்னிலை வகித்தார். அதேபோல் கண்டி மாவட்டத்திலும் 44.46 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் இம்முறை மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மொத்த வாக்களிப்பு வீதமானது 84.89 ஆக பதிவானது.

இதன்காரணமாகவே நாவலப்பிட்டிய, கம்பளை, ஹேவாஹெட்ட, கண்டி, பாததும்பர ஆகிய தேர்தல் தொகுதிகளை எம்மால் கைப்பற்றக்கூடியதாக இருந்தது.

ஆகவே, என்மீது நம்பிக்கை வைத்து அன்னத்துக்கு வாக்களித்த மக்களுக்கு இத்தருணத்தில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளதுடன், மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் அரசியல் பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடும் எனக்கிருக்கின்றது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது கண்டி மாவட்டத்தில் ஏணி சின்னத்தில் தனித்து போட்டியிட்டு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுத்து எமது பலத்தை நிரூபித்தோம். இம்முறை ஜனாதிபதி தேர்தலிலும் அதனை செய்துகாட்டியுள்ளோம். எனவே, நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பயணம் தொடரும்.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஏற்பட்ட இந்த தோல்வியானது தற்காலிக பின்னடைவாகும். எங்கு தவறிழைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் ஆராய வேண்டும்.

பலவீனங்களை கண்டறிந்து அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறு உரிய வகையில் தயாராகி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றிபெறலாம். இதனைவிடுத்து கட்சி அரசியலையும், நபர்களையும்முன்னிலைப்படுத்தி செயற்பட்டால் மீண்டெழமுடியாத நிலை ஏற்படும்.

அதேவேளை, இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், இன, மத, குல, கட்சி பேதங்களுக்கு அப்பால் இலங்கையில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு பயணிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.