சஜித்தின் தோல்வியின் பின்னர்..! கூட்டமைப்பு ஏன் இந்த முடிவு?

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலணை செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளைப் பெற்று சேவையாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள், அது குறித்து பரிசீலிப்போம்.

தீர்வு வரும் வரை அரசியலில் இணைவதில்லை என கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது, இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும். எனவே எதிர்காலத்தில் அரசோடு இணைந்து செயற்பட பரிசீலணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் களமிறங்கிய சஜித் பிரேமதாசவை ஆதரித்தனர்.

இந்நிலையில், சஜித் பிரேமதாச தோல்வியடைந்த பின்னர் இவ்வாறான ஒரு முடிவு தொடர்பில் கூட்டமைப்பு ஆலோசனை செய்வது பல சர்ச்சைகளை ஏற்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பாரிய பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது, எதிர்காலத்தில் அரசுடன் இணைந்து செயற்பட போவதாக குறிப்பிடுகின்றமை எந்தளவில் சாத்தியப்படும் என கேள்விகள் எழுகின்றன.

கோத்தபாயவுக்கு எதிராக முழுமையான எதிர்ப்பரசியலை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இவ்வாறான ஒரு முடிவு எடுத்திருப்பது விமர்சனத்திற்குரியது. அத்துடன் வடக்கில் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடையது என கருதுவதும் பொருத்தமானது அல்ல.

கூட்டமைப்பினருக்கான வாக்குகளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காண முடியும். வாக்குகளை வைத்து கணிப்பீடு செய்வதும் தவறானது.

அத்துடன், கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள அதிகளவான வாய்ப்புக்கள் இருந்தும் அப்போதெல்லாம் அதனை விடுத்து தற்போது அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்ள எத்தணிப்பது பல விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

மேலும், மத்திய அரசியலில் கூட்டமைப்பினரின் அரசியல் செல்வாக்கு உடைந்து போயுள்ளதாகவும் அவர்களது முக்கியத்துவம் கண்டுகொள்ளப்படாமை காரணமாகவும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு கூட்டமைப்பு தயாராகின்றது என்றும் தங்களது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவதற்காக அரசுடன் இணைந்து செயற்பட போவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.