சஜித் பிரேமதாசவின் தோல்விக்குப் பின்னால் ரணிலின் சூழ்ச்சி..

Report Print Sumi in அரசியல்

சஜித் பிரேமதாசவின் தோல்விக்குப் பின்னால் ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போயுள்ளதா எனவும் தனக்கு சந்தேகம் இருப்பதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றையதினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறவில்லை. தமிழ் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ் மக்கள் மீது போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும் புரிந்த, ஓர் போர்க்குற்றவாளி, இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைக்கும் வரை கோத்தபாய ராஜபக்சவிற்கு வாழ்த்துக் கூற முடியாது.

கோத்தபாயவின் பதவிக் காலம் முடிந்தாலும் பரவாயில்லை. அவரின் வெற்றிக்காக தமிழ் மக்கள் வாழ்த்தக் கூடிய மனநிலையிலும் இல்லை. நானும் அந்த மனநிலையில் இல்லை. சம்பிரதாயம் என வாழ்த்துவதும், அதன் பின்னர், வீழ்வதும், ஓடுவதுமாக இருந்து கொண்டு வாழ்த்த முடியாது.

இன்னுமொரு விடயத்தை தெளிவாக கூற விரும்புகின்றோம். முதல் 100 நாட்களில், புதிய ஜனாதிபதிக்கான காலம் கொடுக்கின்றோம். அந்த தீபாவளி, சித்திரை வருடப் பிறப்பு, பொங்கல் என சொல்ல முடியாது.

100ஆவது நாள் முடிவதற்குள் இனப்பிரச்சினை தீர்வுக்கான உறுதியான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளத் தவறினால், சர்வதேச ரீதியாக ஐக்கிய நாடுகளின் உதவியுடன், வடகிழக்குப் பிராந்தியத்தில் ஒரு பொது சன வாக்கெடுப்பை நடத்துமாறு, இலங்கையில் இருந்தும், சர்வதேச ரீதியாகவும் இருந்து அழுத்தங்களைப் பிரயோகிப்போம்.

எந்த தடை வந்தாலும், அவற்றை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, ஆகக்குறைந்தது, இணைப்பாட்சி, சமஸ்டியைக் கொண்டதாக ஒரு ஐக்கிய இலங்கைக்குள் இருக்குமாக இருந்தால், நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான உத்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவோம். வலியுறுத்துகின்ற முயற்சியில் இரு இடைக்கால தீர்வை வழங்க வேண்டும்.

இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டிஸ் ஆகிய நாடுகள் துணை நிற்க வேண்டும்.

சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்கு, ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போனதா இல்லையா என்பது பகிரங்கமாக வரும் காலம் மிக விரைவில் என குறிப்பிட்டுள்ளார்.