கோத்தபாயவின் பெயரைக் கேட்டாலே பயம்: காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

Report Print Vanniyan in அரசியல்

கோத்தபாயவின் பெயரைக்கேட்டு நாம் அச்சம் கொள்கின்றோம். சர்வதேசம் இந்த அரசிடம் எமது விடயத்தைப்பற்றிக் கேட்கவேண்டும் என்று முல்லைதீவு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் இன்றைய நாள் ஏற்பாடுசெய்த ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சவின் கடந்தகால செயற்பாடுகளை எண்ணி, தற்போது அச்சத்துடன் இருக்கின்றோம். சர்வதேசம் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தினை, புதிய அரச தலைவருடனும், எம்முடனும் பேசி ஒரு உண்மையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்.

புதிதாக நேற்றைய நாள் அரசதலைவராக கோத்தபாய ராஜபக்ச தெரிவாகியிருக்கின்றார். அவர் யுத்தக் காலத்திலே எமது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் தொடர்புடையவர் என்பதனால் அவரிடமும் நாம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம்.

அவர் அரச தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதால், அவரிடம்தான் இந்த உறவுகளின் முழுத் தகவல்களும் இருக்கின்றது. இதை அவரால் எமக்கு கண்டுபிடித்துத் தர முடியும். அத்தகைய ஒரு உணர்வுடன் இருக்கின்றோம்.

அதே வேளையில் அச்சமும் எமக்கு இருக்கின்றது. கடத்தப்படுவோமோ, கொல்லப்படுவோமா போன்ற அச்ச நிலையும் எமக்கு இருக்கின்றது.

இருந்து நாம் அச்சமடைய முடியாது. ஏனெனில் நாம் அவருக்கெதிராக நாம் ஆயுதம் ஏதும் ஏந்திப் போராடவில்லை. எமது உயிர்களை அவர்களிடம் கொடுத்து, அந்த உயிர்களையே நாம் அவர்களிடம் தேடுகின்றோம்.

எந்த அரச தலைவர் வந்தாலும் நாம் இதைத்தான் கேட்டுக்கொண்டேயிருப்போம். எங்களுக்கான தீர்வென்பது, எங்களுடைய கையளிக்கப்பட்ட உறவுகள் மற்றும், வெள்ளைவான் மூலம் கடத்தப்பட்ட உறவுகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது, இருக்கின்றவர்கள் விடுவிக்கப்படவேண்டும். இல்லாதவர்களுக்கான தக்க பதில்களும் அவர்களால் கூறப்படவேண்டும் என்பதை எதிர்பார்த்திருக்கின்றோம்.

இதில் எமக்கு பாதுகாப்புப் பிரச்சினை இருக்கின்றது. இந்த பாதுகாப்புப் பிரச்சினைக்கு சர்வதேசமே முற்று முழுதான ஒரு முடிவை எடுக்கவேண்டும். பாதுகாப்பென்பது பாரியதொரு பிரச்சினைதான், அரசதலைவர் தற்போது எவ்வாறு இருக்கின்றார் என்பதற்கு அப்பால், அவர் முன்பு எவ்வாறு இருந்தார் என்பதை நினைக்கும்போது, மிகவும் பயங்கரமாக இருக்கின்றது.

இந் நிலையில் எமது போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். அதிலே எவ்வித மாற்றமும் இருக்காது. எமக்கு ஓ.எம்.பி (OMP)வேண்டாம் , எந்த அரசு வந்தாலும் எங்களுடைய உறவுகளுக்கான பதில் எமக்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருக்கின்றோம்.

கோத்தபாய ராஜபக்ஸ தேர்தல் அறிக்கையில், காணாமல் ஆக்கப்படடவர்களுக்கு மரண அறிக்கை பெற்றுத்தரப்படும் எனக் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறிவிட்டார் என்பதற்காக அதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

அவர் நேற்றைய தினம் அரச தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். இதற்கு முன்பு முன்னாள் அரச தலைவரை சந்தித்து நாம் பேசியிருக்கின்றோம். அதேபோல் இவருடனும் பேசி கோரிக்கைகளை முன்வைப்போம்.

அதற்காக அவர் மரணச்சான்றிதழைத் தருவார் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் வட்டுவாகலில் இருந்து ஓமந்தை வரையிலும் எத்தனையோ உறவுகளைக் கையளித்திருக்கின்றோம். வெள்ளைவானில் எத்தனையோ பேர் கடத்தப்பட்டிருக்கின்றனர். அப்படியான உறவுகளுக்கான நீதி பெற்றுத்தரப்பட வேண்டும்.

அவரின் தேர்தல் அறிக்கையினைப்பற்றி எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. நாங்கள் எங்களுடைய உறவினர்கள் இருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

கோத்தபாய ராஜபக்ச அரசதலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், சர்வதேசம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை அரசிடம் கேட்கவேண்டும். முன்னாள் அரச தலைவர், தன்னுடைய காலத்தில் தனக்கு இதுபற்றி தெரியாது எனக்கூறியிருந்தார்.

அதற்கு முன்பிருந்த ஆட்சியாளர் சார்ந்தவரே, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கின்றார். எனவே சர்வதேசம் இது தொடர்பில் அவர்களிடம் கேட்டு எங்களுக்கான உண்மையான நீதியைப் பெற்றுத் தரவேண்டும். அததுடன் எமது பாதுகாப்பையும் பேணவேண்டிய கடமை சர்வதேசத்திற்கு இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியாது. எனவே அரசுடனும் எம்மோடும் பேசவேண்டும் என்பதை எதிர்பார்த்திருக்கின்றோம். கோத்தபாய ராஜபக்ஸ அரச தலைவராக தேர்வுசெய்யப்பட்டு, இதுவரையில் அச்சுறுத்தல் செயற்பாடுகள்எவையும் விடுக்கப்படவில்லை.

எனினும் அவருடைய பேரைக் கேட்டுப் பயப்படுகின்றோம். முன்னைய காலங்களில் அவருடைய செயற்பாடுகளை எண்ணி பயப்படுகின்றோம். வேறு எதற்கும் நாம் பயப்படவில்லை, என்று தெரிவித்துள்ளார்.