தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைப்பதென்பது கடினம்..! புதிய யுகத்தை துவங்கி வைப்பாரா மகிந்த?

Report Print Jeslin Jeslin in அரசியல்

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சாதாரணமான விடயம்தான், தேர்தலில் நாங்கள் ஆதரித்த தரப்பு வெற்றிப் பெறவில்லை என்ற ஏமாற்றம் தமிழ் மக்களுக்கு இருக்கலாம். ஆனால், அதனை ஏற்றுக் கொண்டு புதிய ஜனாதிபதியுடன் பேசி கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் என். ராம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும்.

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மையினர் சஜித்திற்கு வாக்களித்திருந்த போதிலும் ஒட்டுமொத்தமாக இலங்கை வாக்காளர்கள் கோத்தபாயவிற்கு வாக்களித்துள்ளனர்.

இந்த வெற்றியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு புதிய யுகத்தை இவர் துவங்கி வைப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

தமிழ்த் தலைவர்கள் ஏற்கனவே ராஜபக்ச தரப்புடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், புதிய ஜனாதிபதி அதிகாரப் பகிர்வை ஒப்புக்கொள்வாரா என்பதுதான் முக்கியமான கேள்வி.

அதிகாரப்பகிர்வு போதுமானதாக இல்லை என்பது தமிழர்களுடைய குற்றச்சாட்டு. வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதிகாரப் பகிர்வு கிடைப்பது கடினம் என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், புதிய வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆகவே தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும்.

புலிகள் இருந்த காலம் போல் இப்போது இல்லை. அவர்கள் இருந்தபோது பெரும் வன்முறை இருந்தது.

இப்போது தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி தங்கள் வாய்ப்புகளைப் பெற முயல வேண்டும்.

தேர்தலில் வெற்றி – தோல்வி என்பது சாதாரணமான விடயம்தான். தேர்தலில் தாங்கள் ஆதரித்த தரப்பு வெற்றிபெறவில்லை என்ற ஏமாற்றம் தமிழ் மக்களுக்கு இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அவர்கள், ஜனாதிபதியுடன் பேசி கோரிக்கைகளை வைக்க வேண்டும்.

இலங்கை முழுவதுமாக சீனா பக்கம் நிற்கிறது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்றம். அது உண்மையல்ல. தவிர, கோத்தபாய இந்தியாவோடு நெருக்கமாகவே தான் இருந்திருக்கிறார்.

ஆகவே, அவர் ஜனாதிபதியாக வருவதால் இலங்கை – இந்திய உறவில் ஏதும் மாறாது. ஒரு வழக்கமான உறவே நீடிக்கும். உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு, இந்தியா தொடர்ந்து இலங்கை அரசுடன் நெருக்கமாகத்தான் இருந்து வருகிறது. நரசிம்மராவ் துவங்கி, யார் பிரதமராக இருந்தாலும் இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆகவே கோத்தபாய அதிபராகியிருப்பதால் எதுவும் மாறிவிடாது என குறிப்பிட்டுள்ளார்.