ஹேமசிறி மற்றும் பூஜித் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in அரசியல்

விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடந்த பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியமை மூலம் கடமையை செய்ய தவறியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக அறிக்கையை பெற்று விசாரணைகளை நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில் இவர்களை கைது செய்ததாகவும், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியவர்களுடன் இவர்கள் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனை தவிர சந்தேகநபர்களின் வங்கிக் கணக்கு தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும் சந்தேகநபரான ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு தனிப்பட்ட ரீதியில் தனியார் மற்றும் அரச வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கணக்குகள் எதுவுமில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் 5 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் அது குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதவான் சந்தேகநபர்களை டிசம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.