விக்னேஸ்வரனின் திடீர் முடிவு! நியாயம் கிடைக்குமா தமிழ் மக்களுக்கு?

Report Print Varun in அரசியல்

வடக்கில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாக தாம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்:

சஜித் பிரேமதாச மற்றும் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரிடம் நாம் 13 கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அது தமிழ் மக்களின் கோரிக்கைகளாகும். இவர்கள் இருவரிடமும் நாம் இதை பற்றி தெரிவித்தோம்.

இவர்கள் இருவரும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பதவிக்கு வந்த பின்னர்தான் இந்த விடயம் குறித்து நாம் பேசவிருந்தோம். அதனையே நாம் இப்பொழுது செய்ய போகிறோம்.

அதை தவிர நாம் அவர்களிடம் எங்களுக்கு சாப்பிட, குடிக்க தாருங்கள் என்று கேட்கவில்லை. எதிர் காலத்தில் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதனையும் எமது மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்பதனையும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய போகிறீர்கள் என நாம் கேள்வியெழுப்ப உள்ளோம். அவர் எமக்கு நல்ல தீர்வை தருவார் என நான் நம்புகிறேன்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ எதை செய்ய நினைத்தாலும் அதனை செய்து முடிப்பார். எனவே நாம் பொறுத்து பார்ப்போம்.