முஸ்லிம் அரசியல்வாதிகள் அராஜக ரீதியில் பலமடைந்துள்ளார்கள்: ஈரோஸ் தலைவர்

Report Print Theesan in அரசியல்

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அராஜக ரீதியில் தம்மை பலப்படுத்திக் கொண்டார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை என்று ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் க.துஸ்யந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

புதிய ஜனாதிபதிக்கு எமது கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம். தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளான அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விடயம், தொல்பொருட் திணைக்களத்தின் அடாவடிகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போது விரிவாக பேசியிருந்தோம்.

அத்துடன் தமிழ் மக்களின் அன்றாட, அவசிய பிரச்சினைகளையும் எடுத்துக் கூறியிருந்தோம் அவற்றிற்கு, சாதகமான பதில்களை எமக்கு அவர் வழங்கியிருந்தார்.

கோத்தபாயவிற்கு தமிழ் மக்கள் அதிகமாக வாக்களிப்பார்கள் என்று எண்ணியிருந்தோம். அது நடைபெறவில்லை. அவர் அரசியலுக்கு புதியவர் என்பது கூட காரணமாக இருக்கலாம். அவரது அரசியல் வாழ்க்கை இப்போதே ஆரம்பித்திருக்கின்றது.

எனவே எதிர்கால செயற்பாட்டின் மூலம் தான் இந்த மக்களின் மனங்களை அவர் வெல்லமுடியும். எனினும் அவரது செயற்பாட்டின் மூலம் அடுத்த தேர்தலில் அதிகளவான வாக்கு வங்கியை அவர் பெறுவார் என நிச்சயம் எதிர்பார்க்கின்றோம். இன்று அமைந்திருக்கின்ற அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைகளில் கூடிய கவனம் செலுத்துவார்கள் என்பது எமது நம்பிக்கை.

எதிர்வரும் காலங்களில் இளைஞர் யுவதிகளை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். அவர்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து தமிழ் சிங்கள மக்களிடையே சகோதர ஒற்றுமையை உருவாக்கி எமக்கு இருக்கின்ற அடிப்படை மற்றும் தேசிய பிரச்சனைகளிற்கு தீர்வு காணும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளோம்.

தற்போது அமைந்திருப்பது குடும்ப ஆட்சி என்று பலர் சொன்னாலும் அந்த குடும்ப ஆட்சியை சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதனாலேயே மிகவும் அதிகளவான வாக்குகள் அவருக்கு கிடைத்திருந்தது. கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அராஜக ரீதியில் தம்மை பலப்படுத்திக்கொண்டார்களே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. தங்களுடைய சமூகம் சார்ந்தவர்களின் தனித்தேவைகளை பூர்த்தி செய்ததுடன் சிங்கள மக்களையோ, தமிழ் மக்களையோ ஏற்றுக்கொள்ளாதவர்களாக தான் அவர்களது நடவடிக்கைகள் இருந்தது.

இதேவேளை நல்லாட்சி அரசில் நாடளாவிய ரீதியில் எந்தவித அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. குறிப்பாக நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல் வாதிகளிற்கு அந்த அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனாலேயே நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாம் ஆதரவினை வழங்கவில்லை என மேலும், கூறியுள்ளார்.