இலங்கையில் உக்கிரமடைந்த யுத்தத்தை தி.மு.கவால் தடுத்திருக்க முடியும்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

தி.மு.க நினைத்திருந்தால் இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்ததை தடுத்திருக்க முடியும், அவ்வாறு செய்ய தவறி தற்போது இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பது அந்த கட்சியின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உண்மையான இதயத்துடன் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை அணுகுகின்றனர்.

அ.தி.மு.கவின் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இலங்கை தமிழர்கள் தொடர்பில் கரிசனை காட்டினர்.

அதே வழியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் பயணிக்கும். தி.மு.க உள்ளிட்ட தமிழக கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக இலங்கை மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றன.

தி.மு.க நினைத்திருந்தால் இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்ததை தடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்ய தவறி தற்போது இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பது அந்த கட்சியின் இரட்டை வேடத்தை எடுத்து காட்டுகின்றது.

இலங்கையை ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் அதுபற்றி கவலை இல்லை. இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும், அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.