கோத்தபாயவை சந்திக்கத் தயாராக இருக்கும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர்!

Report Print Theesan in அரசியல்

புதிய ஜனாதிபதியை சந்தித்து பேச தயாராக இருக்கின்றோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது புதிய ஜனாதிபதியுடனான உறவு எவ்வாறு இருக்கப் போகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய அவர்,

எங்களை பொறுத்த வரையில் நாங்கள் முதலில் சொன்னது போல தமிழ் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். அதனால் நாம் எங்களுடைய மக்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக புதிய ஜனாதிபதியிடம் பேசியே ஆகவேண்டும்.

அடுத்ததாக நாம் எதிர்பார்க்கின்ற இன்னொரு விடயம் வடக்கு, கிழக்குகளில் இருக்கின்ற முப்படை இராணுவங்களும் தமது விருப்பத்திற்கேற்பவே செயற்படும் நிலை ஏற்படக் கூடும்.

ஆகவே அந் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலையில் நாம் ஜனாதிபதியை சந்தித்து பேசவேண்டும்.

அந்த வகையில் ஜனாதிபதியை சந்தித்து பேச தயாராக இருக்கின்றோம். எம் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், அநீதிகளை அவர்களூடாக நிறுத்த வேண்டும் என்ற நடவடிக்கைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக செயற்படும்‌ என்று குறிப்பிட்டார்..

இதேவேளை, இச் செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழீழ விடுதலை இயக்கத்திற்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டு நிலமையில் இவ் இயக்கத்தினர் இரு தரப்பாக பிரிந்திருக்கும் நிலையில் சமரசம் செய்யப்பட்டு ஒற்றுமையாக மீள இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் வழங்கிய அவர்,

எங்களை பொறுத்தவரையிலும் தமிழீழ விடுதலை இயக்கம் இரு தரப்பாக உடைந்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களது கட்சியை பொறுத்தவரை நான் தவறு செய்தால் என்ன? யார் செய்தால் என்ன? தவறு தவறுதான். தப்பு செய்தவர்களை எம் கட்சி தண்டிக்கும் அது நிச்சயமாக நடக்கும். ஆகவே ஏனையவர்கள் நாங்கள் ஒன்றாகவே பயணிப்போம்.

கட்சியை மீறி நடந்தவர்களுக்கு தண்டனை வழங்கியிருக்கிறோம். அதே போல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்களுக்கு கட்சி யாப்பின் அடிப்படையில் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். ஆனால் எங்கள் கட்சி இரு தரப்பாக பிரிந்துவிட்டது என செய்திகள் தான் சொல்கின்றது.

தமிழீழ விடுதலை இயக்கம் என்றைக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். அது ஒன்றாகத் தான் பயணிக்கும் என்பதையே நான் கூறுகின்றேன் என்றார்.