ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள தலைமைத்துவ பிரச்சினை குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடன் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள ஏனைய கட்சிகளுக்கும் இந்த விடயம் பாதிப்பை ஏற்படுத்தும், என சுட்டிக்காட்டியுள்ள அவர், பிரதமர் இந்த விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றிருந்தது.
ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தோல்வியடைந்தார். இதனால், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் பிரதி தலைவர் பதவியை அவர் இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், விரைவில் பொது தேர்தல் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்ற கோரிக்கை தலைதூக்கியுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.
“நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டிய தேவை கிடையாது. இந்நிலையில், உரிய காலத்தில் புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தால் அதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
அது வரையில் நாடாளுமன்றம் செயற்படுவதற்கான மக்கள் ஆணை இருக்கிறது. அமைச்சரவை தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும்.
தனித்தனியாக அமைச்சர்கள் பதவி துறப்பது தவறான முன்மாதிரியாகும். எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங் கட்சி தலைவர்களையும், அமைச்சர்களையும் அழைத்து பேச வேண்டும்.
அதிகாரம் தொடர்பில் சட்ட பூர்வமான சாதக நிலைமை எம் பக்கம் இருந்தாலும் புதிய ஜனாதிபதியின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எமக்கு முழு சம்மதம்.” என கூறியுள்ளார்.