ஜனாதிபதியுடன் பயணிப்பதற்காக லலித் வீரதுங்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

Report Print Banu in அரசியல்

லலித் வீரதுங்கவிற்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளரான லலித் வீரதுங்கவிற்கு மூன்று வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அவர் தற்போது பிணையில் வெளிவந்துள்ள நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை 2020ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

லலித் வீரதுங்கவால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை ஒன்றை பரிசீலனை செய்த தீபாலி விஜேசுந்தர மற்றும் ருவன் பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லலித் வீரதுங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காஞ்சன ரத்வத்தே, தனது கட்சிக்காரருக்கு ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ள அழைப்பு வந்துள்ளதால், குறித்த காலப்பகுதிக்காக தற்போது நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் குழாம் லலித் வீரதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை தளர்த்துவதற்கு உத்தரவிட்டனர்.

முன்னைய அரசாங்க காலத்தில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோர் நாடு முழுவதிலும் உள்ள விகாரைகளுக்கு சில் வகை துணிகளை பகிர்ந்தளித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு மூன்று வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.