எம்.சீ.சீ உடன்படிக்கை விரைவில் செயற்படுத்தப்படும் அமெரிக்கா

Report Print Steephen Steephen in அரசியல்

மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கையை இலங்கையில் விரைவில் செயற்படுத்த தயாராக இருப்பதாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ஹெலிஸ் ஜே.வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பிராந்தியத்தில் சீனாவின் செயற்பாடுகள் சம்பந்தமாக வொஷிங்டனில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை இந்த உடன்படிக்கையை அமுல்படுத்தும் போது காணிகளை பதிவு செய்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் விரிவாகும். இந்தியா இது குறித்து காட்டும் ஆர்வம் சம்பந்தமாகவும் அமெரிக்க கவனம் செலுத்தியுள்ளது எனவும் உதவி இராஜாங்க செயலாளர் ஹெலிஸ் ஜே.வோல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கை மூலம் இலங்கைக்கு, அமெரிக்கா 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க உள்ளது.

இந்த உடன்படிக்கை ஊடாக முதல் தவணையாக இலங்கை மத்திய வங்கிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். கடனை தவணை செலுத்த இந்த டொலர்களை பயன்படுத்த அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள், இந்த உடன்படிக்கை “அமெரிக்காவின் மரண பொறி” எனக் கூறி அதனை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான தொனிப்பொருளாக கொண்டு பிரசாரங்களை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த உதய கம்மன்பில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் உடன்படிக்கை தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு முக்கியமான மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷ்ன் உடன்படிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நத்தார் விடுமுறைக்கு முன்னர் நிறைவேற்றவில்லை என்றால் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்காமல் போகும் என சுயாதீன பொருளாதார ஆய்வாளரான இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் டப்ளியூ.ஏ.விஜேவர்தன எச்சரித்துள்ளார்.

ஒரு நாட்டின் தனிநபர் 4 ஆயிரத்து 85 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக இருப்பதன் அடிப்படையிலேயே நிதியுதவி வழங்கப்படுகிறது.

2016 ஆம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நிதி வழங்கப்படவுள்ளது. அந்த காலத்தில் இலங்கையின் தனிநபர் வருமானம் 4 ஆயிரத்து 85 டொலர்களுக்கு குறைவாக காணப்பட்டது. இதனால், எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உடன்படிக்கையில் கையெழுத்திடாவிட்டால் அந்த நிதி மீண்டும் இலங்கைக்கு கிடைக்காது.

அமெரிக்க அரச நிறுவனங்களுக்கு டிசம்பர் மாதம் இறுதி இரண்டு வாரங்கள் நத்தார் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனால், டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னராவது இந்த உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். உடன்படிக்கை மூலம் அமெரிக்கா அன்பளிப்பாக வழங்கும் 480 மில்லியன் டொலர்கள் குறுகிய காலத்திற்கு மிகவும் முக்கியமானது என விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.