வாகரைப் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Report Print Navoj in அரசியல்

மட்டக்களப்பில் உள்ள வாகரைப் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வரவு செலவுத் திட்டம் மேலதிக 4 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வாகரைப் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கோணலிங்கம் தெரிவித்துள்ளார்.

வாகரைப் பிரதேச சபையின் 21ஆவது அமர்வு இன்று சபையின் தவிசாளர் எஸ்.கோணலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களினது ஒத்துழைப்புடன் குறித்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

இங்கு இரகசிய வாக்கெடுப்புக்கு கோரப்பட்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பகிரங்க வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு அமைவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, நான்கு மேலதிக வாக்கினால் இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 10 பேர் வாக்களித்ததுடன், எதிராக 06 பேர் வாக்குகளை அளித்திருந்தனர். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார்.

அந்தவகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 04 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 02 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 02 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஆனாலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த பா.முரளிதரன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து கொண்ட நிலையில் குறித்த சபை அமர்வில் அவர் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.