அமைச்சு பதவிகளை எதிர்பார்க்கவில்லை - நாமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பெரிய அர்ப்பணிப்புகளை செய்தவர்கள் இருக்கின்றனர் எனவும் அவர்கள் பொறுப்புகளை வகிக்க முடியும் என்பது மாத்திரமல்ல பொறுப்பு வகிக்க வேண்டிய நபர்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை புதிய ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அமைச்சு பதவிகளுக்கான நபர்களை தெரிவு செய்து, அவர்களின் சிரேஷ்ட மற்றும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன.

இதனடிப்படையில் புதிய தோற்றத்தை எதிர்காலத்தில் நாட்டில் காண முடியும். நான் எந்த அமைச்சு பொறுப்புகளை எதிர்பார்க்கவில்லை. கட்சிக்குள் எனக்கு வழங்கப்பட்ட பணிகள் இருக்கின்றன.

அதன்படி எதிர்காலத்தில் செயற்படுவேன். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்திரமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்லாது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த அரசாங்கத்தை போல் புதிய அரசாங்கம் போலியான செயற்பாடுகளை முன்னெடுக்காது சரியான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும்.

சட்டத்தை அமுல்படுத்த மூன்று நீதிபதிகளை கொண்ட நீதிமன்றங்களோ, நிதி மோசடி விசாரணைப் பிரிவோ தேவையில்லை.

நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானது. அத்துடன் தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளாது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.