இனங்களை ஒன்றிணைப்பது முக்கியமானது - மஹேஷ் சேனாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு கோருவதாகவும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தகுதியானவர்களுக்கு தகுந்த இடத்தை வழங்கி தேசிய பொருளாதார கொள்கைக்குள் ஜனாதிபதி செயற்படுவார் என நம்புகிறோம்.

அத்துடன் குறைந்து வரும் நல்லிணக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி, இனங்களை ஒன்றிணைப்பது முக்கியமானது. ஜனாதிபதியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதால், நாட்டுக்காக ஜனாதிபதி எடுக்கும் சாதகமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தீர்மானகரமானது. அந்த தேர்தலில் மக்கள் நன்றாக சீர்தூக்கி பார்த்து நேர்மையான, ஊழலற்ற நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறான நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் எதிர்பார்த்த வேலைகள் நடக்காமல் போகலாம். புத்திசாலியான, கொள்கை மதிக்கும் நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் மஹேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.