சிறிகொத்தவில் கூடியுள்ள ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் சம்பந்தமான மீளாய்வும் கலந்துரையாடலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்றது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வரவழைத்து தொடர்ந்தும் இந்த மீளாய்வு மேற்கொள்ளப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை முற்பகல் மற்றுமொரு சந்திப்பு நடைபெறவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இதன் போது பேசப்படவில்லை எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண, அடுத்த வாரத்திற்குள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இதனடிப்படையில் கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பன சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளிட்டோர் இருப்பதாக கூறியுள்ளார்.