இலங்கையிலிருந்து அச்சத்தில் வெளியேற முயற்சிக்கும் விசாரணையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள்! த நியூயோர்க் டைம்ஸ்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ராஜபக்ச அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்சவினரை விமர்சித்தவர்களுக்கு எதிராக கடும் ஒடுக்குமுறை ஏற்படுத்தப்படலாம் என அச்சம் அதிகரித்து வருவதாக அமெரிக்காவில் வெளியாகும் நியூயோர்க் டைம்ஸ்பத்திரிகை தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் ஒருவர் கடந்த திங்கட் கிழமை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதுடன் அவரது செல்போன் தரவுகளை தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது முன்கூட்டிய எச்சரிக்கையாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுவிஸர்லாந்தில் அண்மையில் தஞ்சம் கோரிய இலங்கையர்கள் பற்றிய தகவல்களும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாதுகாப்பு குறித்து அஞ்சி நாட்டில் இருந்து வெளியேறியவர்களுக்கு உதவியவர்களின் பெயர்களும் அவரது தொலைபேசியில் இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதே தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை குற்றவியல் புலனாய்வு விசாரணை திணைக்களத்தின் 700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடைவிதித்துள்ளார்.

மேலும் ஒரு செய்தி நிலையம் சோதனையிடப்பட்டதுடன் விசாரணைகளுக்காக தமது கணனிகளை வழங்குமாறு செய்தியாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். வெறுக்க தக்க பேச்சு தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி ராஜபக்சவின் செய்தி தொடர்பாளரிடம் கேட்ட போது, சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த உண்மையை அறிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.

ராஜபக்சவினருக்கு எதிரான விசாரணைகளை இரத்துச் செய்யும் நோக்கம் இல்லை எனவும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தி ஆண்கள் பல மணி நேரம் வைத்திருந்தனர் எனவும் இதனை யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவோம் என அவரை விடுதலை செய்யும் முன்னர் அச்சுறுத்தியதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்சவினரின் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை நடத்திய நபர் பற்றி தகவல்களை கண்டறிய அந்த ஆண்கள் கவனம் செலுத்தியுள்ளனர். குறித்த புலனாய்வு அதிகாரி கடந்த ஞாயிற்றுக் கிழமை குடும்பத்துடன் சுவிஸர்லாந்துக்கு தப்பிச் சென்றார்.

இந்த நபர்கள் ராஜபக்சவுடன இணைந்துள்ளவர்களா அல்லது பிரபலமான அரசியல் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு அமைய செயற்படும் நபர்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் வரை ஒரு தசாப்தமாக ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சிக் காலத்தில் இறுதியான வருடங்களில் எதிரிகள் கடத்தி செல்லப்பட்டனர். சாதாரண உடையில் வான்களில் வந்த ஆண்களால் இந்த கடத்தல் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கோரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து பாதுகாப்பு தொடர்பான கவலைகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டன. இது ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பை உருவாக்கியது.

இலங்கையின் நீண்ட மற்றும் கொடிய உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தனர். போரை முடிவுக்கு கொண்டு வந்ததால் ராஜபக்ச சகோதரர்களுக்கு இலங்கைக்கு பலத்த ஆதரவு ஏற்பட்டது.

எனினும் பயங்கரமான போர் குற்றங்கள், மற்றும் பிற ஊழல் , மோசடிகள் தொடர்பாக இந்த சகோதரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர் தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். நாட்டின் இரண்டு சக்தி வாய்ந்த அரசியல் பதவிகளை குடும்பத்திற்குள் வைத்துக்கொண்டனர்.

இந்த நிலையில், சுவிஸ் தூதரக ஊழியரின் கடத்தல் தொடர்பாக கேள்விகளுக்கு பதிலளிக்கவும் தூதரக ஊழியர்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதங்களை வழங்கவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இன்று சுவிஸ் தூதுவரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து சுவிஸ் தூதுவர் Hanspeter Mock க்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை விமர்சித்ததாக கூறப்படும் நியூஸ் ஹப் என்ற செய்தி நிறுவனத்தின் அலுவலகம் பொலிஸார் மற்றும் சிவில் உடையில் சென்ற அதிகாரிகளால் சோதனையிடப்பட்டமை இலங்கை செய்தியாளர்களை கவலையடைய செய்துள்ளது. தமது கணனிகளை திறக்குமாறு பல செய்தியாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நியூஸ் ஹப் செய்தித்தளத்தின் இணையாசிரியர் தனுஷ்க ராமாநாயக்க, இது இலங்கையின் ஒரு இருண்ட யுகத்தின் ஆரம்பம் என்று அஞ்சுவதாக கூறியுள்ளார்.

இது அதிகரித்து வரும் அடக்குமுறையின் அடையாளம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு தெளிவான முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செய்திகள் வெளியிடப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் செய்தித்தளத்தின் அலுவலகம் சோதனையிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படும் செய்தித்தளம் ஒன்றின் செய்தியாளர் 8 மணி நேரம் விசாரிணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குறித்த செய்தியாளர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட செய்தியும் வெளியானது.

தேர்தலில் எளிதான வெற்றியை பெற்ற கோட்டாபய ராஜபக்ச தனது எதிரிகளுடன் சமரசம் செய்துகொள்ள முயற்சிப்பார் என ராஜதந்திரிகள் நினைத்தனர். வெற்றி பெற்ற சிறிது நேரத்தில் அறிக்கை வெளியிட்ட ராஜபக்ச அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தியிருந்தார்.

அரசாங்கம் மற்றும் அவர்களின் வழிக்கு குறுக்காக நிற்கும் எவரும் அல்லது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் எதிரிகளாக பார்க்கப்படுவார்கள் எனவும் தாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பதாகவும் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை விசாரணைகள் என்ற பெயரில் போரில் ஈடுபட்ட படையினர், முன்னாள் கடற்படை தளபதி, புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பிக்குமாரை சிறையில் அடைப்பது குறித்தே கடந்த அரசாங்கம் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய பிக்குமாரிடம் கூறியிருந்தார்.

தனது பெயரை கூறும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது நீதியானது அல்ல எனவும் அது சட்டத்தின விதியல்ல எனவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிரான ஒரு வழக்கு புதன் கிழமை விசாரணைக்கு எடுக்கப்படவிருந்ததுடன் அது அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜபக்ச ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்ட செய்தியாளர் பிரகீத் ஹெக்னேலிகொட தொடர்பாக வழக்கும் இதில் அடங்கும்.

அவர் 2010 ஆம் ஆண்டு காணாமல் போனார், இராணுவப் புலனாய்வு பிரிவினர் அவரை கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என அரசாங்க புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு இராணுவ லெப்டினட் கேர்ணல் உட்பட 6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல மாட்டார்கள் என ஹெக்னேலிகொடவின் மனைவி சந்தியா நம்புகிறார். தனது கணவர் கடத்தப்பட்டு ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் அவரது பாதுகாப்புக்காக அஞ்சுகிறார் எனவும் த நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.