சஜித் பிரேமதாச தோல்வியடையக் காரணம் என்ன? எம்.பி ஜோன் அமரதுங்க விளக்கம்

Report Print Murali Murali in அரசியல்

கடந்த காலத்தில் எமது அரசாங்கத்தில் காணப்பட்ட குறைப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். நாட்டு மக்கள் பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளனர்.

அதற்கு தலை வணங்கி, எமது கௌரவத்தினை தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசிய கட்சிதான் பழைமையான அரசியல் கட்சி.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்தான் கடந்த காலத்தில் இந்நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்ட யோசனைகளை முன்வைத்தவர். அதை இன்றும் நம்மால் காணக்கூடியதாய் உள்ளது.

எவ்வாறாயினும், கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல்யத்துவம் குறைந்தது. அதை எண்ணி நாம் கவலையடைகிறோம். அதற்கு பல காரணங்கள் இருந்தன.

எமது தலைமையில் குறைப்பாடுகள் இல்லை. எமது பொருளாதாரம் முகங்கொடுக்க நேர்ந்த நெருக்கடிகள், அதேபோல் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்த நிவாரணங்களை வழங்க முடியாமல் போனது.

அது பாரிய குறைப்பாடாக அமைந்தது. இதன் காரணமாகவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து அதிகப்படியான வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொடுத்தனர்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.