நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும்! பிரதமர் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்ப அனைவரும் நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சின் கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப்பிரகடனத்தில் தெரிவித்திருக்கும் விடயங்களுக்கேற்ப நாம் செயற்பட வேண்டும்.

நாட்டில் நூற்றுக்கு 98 வீதமானோருக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சகல மக்களுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும். அத்தோடு நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், வீடமைப்பு திட்டங்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

கொழும்பில் தற்போது குடியிருப்புக்கள் மாத்திரம் காணப்படும் இடங்கள் என்று எந்த பிரதேசத்தையும் அடையாளப்படுத்த முடியாது. காரணம் எல்லா இடங்களிலும் எல்லா விடயங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைமத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. சில பிரதேசங்களில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்துகின்றன.

அதற்காக எம்மால் யானைகளை கொல்ல முடியாது. காரணம் யானைகள் இருக்கும் பிரதேசங்களில் நாம் தான் குடியிருப்புக்களை அமைத்திருக்கின்றோம். எனவே இவ்வாறான வீடமைப்பு திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இன்று நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு தேவையான பல யோசனைகள் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே அவரது யோசனைகளுக்கு ஏற்பட அனைவரும் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.