மீண்டும் வெள்ளை வான் ஞாபகப்படுத்துகின்றது! மகேஷ் சேனாநாயக்க

Report Print Murali Murali in அரசியல்

பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயர் பட்டியலை வெளிப்படுத்தி அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுத்திருப்பது அடிப்படை உரிமை மீறும் செயலாகும்.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு கடமையில் இருக்கும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களுக்கு வெள்ளை வேனை ஞாபக மூட்டும் செயலாகும் என முன்னாள் இராணுவ தளபதி ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள தேசிய மக்கள் அமைப்பு காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொலிஸ் திணைக்களத்தில் சேவை செய்யும் அதிகாரிகள் சிலர் நாட்டைவிட்டு வெளியேறாமல் அவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இது பிரச்சினைக்குரிய விடயமாக இன்று பார்கப்படுகின்றது. 2010ஆம் ஆண்டு இந்த நிலைக்கும் நானும் ஆளாகி இருந்தேன். நான் இராணுவத்தில் இருந்து வெளியேறிய நிலையில் சிவில் உறுப்பினராகவே நாட்டைவிட்டு சென்றேன். என்றாலும் அதன் பாதிப்பு தொடர்பில் என்னால் நன்கு உணர்ந்துகொள்ளலாம்.

அத்துடன் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்பம் சகிதம் நாட்டைவிட்டு சென்றுள்ளதை அறிகின்றேன்.

தேபோன்று இரகசிய பொலிஸ் பிரிவு அதிகாரிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுப்பதற்கு அல்லது அவர்கள் உரிய அனுமதியுடன் செல்லவேண்டும் என்பதற்காக அவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இது எந்த நாட்டிலும் இடம்பெறக்கூடாத விடயமாகவே நான் காண்கின்றேன். நாட்டு பிரஜை யாராக இருந்தாலும் அவர் எந்த நாட்டுக்கு செல்வதற்கும் அவருக்கு உரிமை இருக்கின்றது.

என்றாலும் கடமையில் இருக்கும் நிலையில் செல்வதாக இருந்தால் அந்த திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

என்றாலும் இவர்களின் பெயர், ஆள் அடையாள அட்டை, முகவரி மற்றும் அவர்களின் படம் வெளியில் செல்வது நாட்டின் பாதுகாப்புக்கு தடையாக இருக்கலாம்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு கடமையை மேற்கொள்ளும் நிறுவனம் மற்றும் அந்த அதிகாரிகள் தொடர்பில் இதனையும் விட பொறுப்புடன் செயற்பட்டிருக்கவேண்டும்.

தற்போது இடம்பெற்றிருக்கும் ஒரு சில சம்பவங்கள் மீண்டும் வெள்ளை வேனை ஞாபகப்படுத்தி இருக்கின்றது.

அத்துடன் கடந்த ஒருவார காலத்தில் நீதிமன்றங்களினால் விடுக்கப்பட்ட தீர்ப்புக்கள் மற்றும் கட்டளைகளைப்பார்க்கும்போது நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் விசாரித்துவரும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது தெளிவாகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.