ஐ.தே.கவின் 57 எம்.பிக்கள் கையொப்பமிட்ட கடிதத்திற்கு சபாநாயகர் பதில்

Report Print Malar in அரசியல்

நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 பேர் கையொப்பமிட்டு தமக்கு கடிதமொன்றை நேற்று மாலை அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விடயம் குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,

57 உறுப்பினர்களின் கோரிக்கை தொடர்பாக தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளருக்கு தெரிவித்துள்ளதாகவும், அக் கடிதத்தின் பிரதியொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

57 உறுப்பினர்களது கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தவும், நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கருதப்படும் நிலையில் கட்சியே இதற்கான தகுந்த முடிவை எடுக்க வேண்டும்.

இதுவரை எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இரு தரப்பினரிடமிருந்தும் வெவ்வேறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, இரு தரப்பினரும் கலந்தாலோசித்து எடுக்கும் முடிவை எனக்கு அறிவிக்கவும். நாடாளுமன்ற கோட்பாடுகளுக்கு அமைய எதிர்வரும் நாடாளுமன்ற தினத்தில் இது குறித்து நாடாளுமன்றுக்கு அறிவித்ததன் பின்னர் குறித்த பதவி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.