பசில் ராஜபக்ஸ வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

Report Print Kanmani in அரசியல்

அமைச்சர் பசில் ராஜபக்ஸ மருத்துவ பரிசோதனைக்காக எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்காவிற்கு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான ஒரு கோடியே 94 இலட்சம் ரூபா நிதியை செலவிட்டு மஹிந்த ராஜபக்ஸவின் நிழற்படங்களுடன் கூடிய நாளேடுகளை அச்சிட்டு விநியோகித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கின் விசாரணைகள் இன்றும், நாளையும் முன்னெடுக்கப்படவிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பில் ஆலோசனைகளை பெறவுள்ளமையால், விசாரணைகளை ஒத்திவைக்குமாறு வழக்கின் முதலாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ஸ சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆட்சேபனை தெரிவிக்காமை காரணமாக வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதி வரை ஒத்திவைத்து மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.