ஜனாதிபதியாக முதல் வெளிநாட்டுப் பயணம்! புதுடெல்லியை சென்றடைந்தார் கோட்டாபய

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இந்தியா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அந்நாட்டு மத்திய அமைச்சர் விகே சிங் புதுடெல்லியில் வைத்து வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை இந்தியா சென்றடைந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு வருமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் மூலமாக அழைப்பு விடுத்திருந்தார்.

அண்மையில் இலங்கை வந்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கோட்டாபய ராஜபக்சவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு வருமாறு மோடி விடுத்திருந்த அழைப்பை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை இந்தியா சென்றார். டெல்லி விமான நிலையம் சென்றடைந்த அவரை மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்.

இந்தியா சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அந்நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற கோட்டாபய ராஜபக்சவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.