சுவிஸ் தூதரக பணியாளர் அச்சுறுத்தல் – அரசாங்கத்துக்கு தெரியாதாம்

Report Print Murali Murali in அரசியல்

சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது. இந்த சம்பவம் கடந்த 25ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியவில்லை எனவும், பதில் பொலிஸ் மா அதிபர் இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடுவார்” எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் அண்மையில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவத்திற்கு சுவிஸ் அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன், முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

சுவிஸ் தூதரகத்துடன் தொடர்புடைய தகவல்களை வெளிப்படுத்தக் கோரியே, பெண் பணியாளர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேர்னில் உள்ள இலங்கை, தூதுவர் சுவிஸ் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இந்த விடயம் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.