அரசாங்கத்துடன் பேசத் தயாராகவே இருக்கிறோம்! மாவை சேனாதிராசா

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எமது இலக்கான இனத்தின் விடுதலைக்காகவும், அழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்து போன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் பேசத் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாகரிகமுடைய மக்களாக வாழ்வதற்காக எங்களை நாங்கள் ஆளவேண்டும். இதற்கான இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்த இனமாக நாங்கள் இருக்கின்றோம்.

இந்த இனத்தின் பிரதிநிதிகளாக நன்றியுடையவர்களாக நாங்கள் மாவீரர் தினத்தை கடைப்பிடிக்கின்றோம். அந்தவகையில் எங்களுடைய அர்ப்பணிப்பு மிக்க போராட்டம் ஜனநாயக மற்றும் ஆயுத வழிகளில் நடைபெற்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதில் ஒரு வேட்பாளர் எமது அழிந்துபோன தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலவிடயங்களை அறிவித்திருந்தார். அதுதான் பாதகமாக முடிந்தது.

எங்களுடைய கொள்கைகள் எவ்வளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதையும் இந்த இனத்தின் விடுதலையை எவ்வளவுக்கு நிறைவேற்ற முடியும் என்பதையும் வைத்து நாம் வாக்களித்துள்ளோம். எனினும் இப்போது ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாங்கள் பேச ஆயத்தமாக உள்ளோம்.

எமது இலக்கான இனத்தின் விடுதலைக்காகவும், அழிந்துபோன எமது தேசத்தையும் சிதைந்து போன எமது குடும்பங்களையும் மீளக் கட்டியெழுப்புகின்ற தொடர்ச்சியையும் வருகின்ற, இருக்கின்ற அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண கடமைப்பட்டிருக்கிறோம் என்றார்.